மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியில் பனாமா நாட்டுக் கொடியுடன் சென்ற வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும், இரு இந்திய மாலுமிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கப்பல் மீது தாக்குதல்:
கடந்த நவம்பர் 16-ஆம் தேதி, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற ‘எம்டி தாரா கேஸ்’ (MT Tara Gas) என்ற எல்.பி.ஜி. டேங்கர் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
பனாமா நாட்டுக் கொடியுடன் பயணித்த இந்தக் கப்பலில் மொத்தம் 24 இந்தியர்கள் பணியாற்றி வந்தனர். தாக்குதலைத் தொடர்ந்து கப்பலில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஒருவர் மாயம்; இருவர் காயம்:
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, கப்பலில் இருந்த 24 இந்தியர்களில் 21 பேர் ஓமன் நாட்டின் கசாப் பகுதிக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டுள்ளனர். காயமடைந்த இரு இந்திய மாலுமிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், ஒரு இந்தியர் மட்டும் காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன மாலுமியைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்தியா கடும் கண்டனம்:
இந்தச் சம்பவம் குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வணிகக் கப்பல்கள் மற்றும் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தெரிவித்துள்ளது.
மேலும், சர்வதேச கடல் வழித்தடங்களில் கப்பல் போக்குவரத்துக்கும் வர்த்தகத்துக்கும் எவ்விதத் தடையும் ஏற்படாத வகையில் பாதுகாப்பான சூழலை விரைவில் உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஓமன் அரசுக்கு நன்றி:
ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம், அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து காணாமல் போன இந்திய மாலுமியைத் தேடும் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
மீட்புப் பணிகளில் உடனடியாக உதவி செய்த ஓமன் அரசாங்கத்திற்கும் இந்திய வெளியுறவு அமைச்சகம் நன்றி தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது சர்வதேச கடல் வர்த்தகத்திலும், கப்பல் பணியாளர்களின் பாதுகாப்பிலும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
