Homeசெய்திகள்மாவட்டம்திருவள்ளூர் அருகே பறவைக் காய்ச்சலால் 1,000-க்கும் மேற்பட்ட வாத்துகள் உயிரிழப்பு – மத்திய நோய் கட்டுப்பாட்டு...

திருவள்ளூர் அருகே பறவைக் காய்ச்சலால் 1,000-க்கும் மேற்பட்ட வாத்துகள் உயிரிழப்பு – மத்திய நோய் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு!

-

- Advertisement -

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே பறவைக் காய்ச்சல் பாதிப்பால் 1,000-க்கும் மேற்பட்ட வாத்துகள் கொத்துக்கொத்தாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மத்திய நோய் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.திருவள்ளூர் அருகே பறவைக் காய்ச்சலால் 1,000-க்கும் மேற்பட்ட வாத்துகள் உயிரிழப்பு – மத்திய நோய் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு!

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த மாம்பாக்கம் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (41), பல ஆண்டுகளாக வாத்து வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவைச் சேர்ந்த வாத்து வியாபாரி சீனு என்பவரிடம் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட வாத்துகளை ரூ.4 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார்.

பின்னர், அந்த வாத்துகளை சரக்கு வாகனம் மூலம் கொண்டு வந்து, வடதில்லை பகுதியில் ஆரணி ஆற்றங்கரையோரம் உள்ள பட்டியில் அடைத்து வளர்த்து வந்துள்ளார். மேலும், ஆரணி ஆற்றுப் பகுதிகள், ஏரிகள், குளங்கள் மற்றும் வயல்வெளிகளுக்கு வாத்துகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம் மேய்ச்சலில் இருந்த வாத்துகள் திடீரென சுருண்டு விழுந்து கொத்துக்கொத்தாக உயிரிழக்கத் தொடங்கின. இதுகுறித்து வாத்துகளின் உரிமையாளர் வெங்கடேசன் கால்நடை மருத்துவர்களுக்குத் தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர்கள் உயிரிழந்த வாத்துகளின் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சென்னையில் உள்ள ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவில், வாத்துகள் பறவைக் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழக கால்நடைத் துறையினர் மத்திய நோய் கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, மத்திய நோய் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் வாத்துகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதற்கிடையே, நல்ல நிலையில் இருந்த 200 வாத்துகளை வியாபாரியிடம் மீண்டும் ஒப்படைத்து, வாகனம் மூலம் ஆந்திராவுக்கு அனுப்பி வைத்ததாக வெங்கடேசன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்த தகவலையும் கால்நடைத் துறையினர் ஆந்திர மாநில கால்நடைத் துறையினருக்குத் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக வெங்கடேசனை பெரியபாளையம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர், அவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

திருவள்ளூர் அருகே பறவைக் காய்ச்சல் பாதிப்பால் 1,000-க்கும் மேற்பட்ட வாத்துகள் உயிரிழந்துள்ள நிலையில், மத்திய நோய் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த வாத்துகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அதன் உரிமையாளர் வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

முதல்வர் கனவு இல்லத் திட்டத்தில் தவணைத் தொகை பெற லஞ்சம் கேட்டதாகப் புகார் – பஞ்சாயத்து கிளர்க், 100 நாள் பணித்தள பொறுப்பாளர் பேசியதாக ஆடியோ வைரல்!

MUST READ