நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள தேசிய பஞ்சாலைக் கழகத்தின் (என்டிசி) கீழ் இயங்கிய பஞ்சாலைகளை மீண்டும் திறக்க வேண்டும் அல்லது தொழிற்சங்கங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு தொமுச வலியுறுத்தியுள்ளது.
கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால், வரும் டிசம்பர் 23ஆம் தேதி வீடு திரும்பா போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.
கோவை ராமநாதபுரத்தில் உள்ள தொமுச அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தொமுச மாநிலப் பொதுச் செயலாளர் பார்த்தசாரதி கூறியதாவது:
கடந்த 1974ஆம் ஆண்டு நாடு முழுவதும் மூடப்பட்ட 128 தனியார் பஞ்சாலைகளை அப்போதைய மத்திய அரசு கையகப்படுத்தி, தேசிய பஞ்சாலைக் கழகத்தின் கீழ் கொண்டு வந்தது. இதன் மூலம் சுமார் 3 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டது.
கொரோனா பொதுமுடக்கத்தின்போது தற்காலிகமாக மூடப்பட்ட என்டிசி ஆலைகள், பல ஆண்டுகள் கடந்தும் மீண்டும் திறக்கப்படவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 8 ஆண்டுகளாக போனஸ், ஊதிய உயர்வு, ஓய்வூதியப் பலன்கள் உள்ளிட்ட சட்டப்பூர்வ பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. பாதுகாப்புப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் ஊதியம் வழங்கப்படாத நிலை நீடிக்கிறது.
கோவையில் உள்ள ரங்கவிலாஸ் ஆலை உள்ளிட்ட என்டிசி ஆலைகளின் சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் நிலையில், அவற்றை இயக்காமல் வைத்திருப்பதால் இயந்திரங்கள் துருப்பிடித்து வீணாகி வருகின்றன. ஆலை வளாகங்களில் உள்ள சொத்துகளும் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. தொழிலாளர் குடியிருப்புகளும் பராமரிப்பின்றி சேதமடைந்து வருகின்றன.
இந்தப் பிரச்சினை தொடர்பாக குடியரசுத் துணைத் தலைவரைச் சந்தித்து மனு அளித்தும், ஜவுளித் துறை அமைச்சருக்குக் கடிதம் அனுப்பியும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. ஆலைகளை இயக்கவும் முடியாது, விருப்ப ஓய்வுத் திட்டமும் வழங்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
எனவே, பிரதமர் நரேந்திர மோடி உடனடியாகத் தலையிட்டு என்டிசி ஆலைகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசால் ஆலைகளை நடத்த முடியாவிட்டால், அவற்றைப் பழைய உரிமையாளர்களிடமோ அல்லது தொழிற்சங்கங்களிடமோ ஒப்படைக்க வேண்டும். தொழிற்சங்கங்களிடம் ஒப்படைத்தால், நாங்களே பொறுப்பேற்று ஆலைகளை நடத்தத் தயாராக உள்ளோம்.
கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சங்கங்களையும் ஒருங்கிணைத்து வரும் டிசம்பர் 23ஆம் தேதி ‘வீடு திரும்பா போராட்டம்’ நடத்தப்படும். என்டிசி ஆலைகளைத் தொழிற்சங்கங்களே ஏற்று நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் போராட்டம் முன்னெடுக்கப்படும்.
