Homeசெய்திகள்சட்டம்ஆதிதிராவிடர் நலத்துறை திட்டங்களில் முறைகேடு புகார்: ஒரு மாதத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உயர்...

ஆதிதிராவிடர் நலத்துறை திட்டங்களில் முறைகேடு புகார்: ஒரு மாதத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

-

- Advertisement -

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் புகார் தொடர்பாக, முறையாக விசாரணை நடத்தி ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.ஆதிதிராவிடர் நலத்துறை திட்டங்களில் முறைகேடு புகார்: ஒரு மாதத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

மேலும், மனுதாரரின் புகார் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தொழில்நுட்பப் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள், அப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்கள், தலைமைப் பொறியாளர் தொடர்பான விவரங்கள், தொழில்நுட்பப் பிரிவின் ஒப்பந்தங்கள் மற்றும் பணிகள் குறித்த தகவல்களைக் கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

அதன் மூலம் கிடைத்த தகவல்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை ஆய்வு செய்தபோது, குறிப்பிட்ட பணிகள் எவ்வாறு ஒதுக்கப்பட்டன, ஒப்பந்ததாரர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டனர், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப அனுமதிகள் முறையாகப் பெறப்பட்டனவா, ஒப்பந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இருப்பதாக மனுவில் தெரிவித்திருந்தார்.

பல கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் குறித்து சந்தேகம்

ஆதிதிராவிடர் வாரியத்தின் மாவட்ட மேலாளர் அலுவலகங்கள் மற்றும் கோட்ட அலுவலகங்களில் பணியாளர்கள் குறைவாக உள்ள சூழ்நிலையிலும், பல கோடி ரூபாய் மதிப்பிலான புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இப்பணிகளுக்கு நிர்வாக மற்றும் தொழில்நுட்ப அனுமதிகள் எவ்வாறு வழங்கப்பட்டன, முறையான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டனவா என்பன குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

மேலும், சில திட்டங்களில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்ட பின்னரே ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டதாகவும் மனுவில் குற்றம்சாட்டியிருந்தார். திட்ட நிதி ஒதுக்கீடு, பயனாளிகள் பட்டியல், ஒப்புதல் ஆணைகள், பணம் வழங்கிய விவரங்கள், பணிகள் நிறைவு பெற்றதற்கான சான்றுகள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகள் ஆகியவற்றை ஒப்பிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

பொலிவு கிட்’ திட்டத்திலும் விசாரணை கோரிக்கை

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ‘பொலிவு கிட்’ திட்டம் குறித்தும் மனுதாரர் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். இத்திட்டத்திற்காக சோப்பு, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்ட விதம், அவற்றின் தரம், அளவு, கொள்முதல் விலை, விநியோகிக்கப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை, பயனாளிகளுக்கான விநியோகப் பதிவுகள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் ஆகியவற்றைச் சரிபார்க்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தியிருந்தார்.

ஒரு மாதத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் ஏற்கெனவே அளித்த மனு மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மனுதாரர் அளித்த புகார் குறித்து முறையாக விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை ஒரு மாதத்திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

கனிமவளக் கடத்தலைத் தடுக்கும் அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது துரதிருஷ்டவசமானது – உச்சநீதிமன்றத்தில் வலிமையாக வாதிட வேண்டும்: அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

MUST READ