Homeசெய்திகள்தமிழ்நாடுதிண்டுக்கல்: 100 அடி பள்ளத்தில் டெம்போ டிராவலர் கவிழ்ந்து 3 பேர் பலி!

திண்டுக்கல்: 100 அடி பள்ளத்தில் டெம்போ டிராவலர் கவிழ்ந்து 3 பேர் பலி!

-

- Advertisement -

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கொடைக்கானல் சாலையில் சவரிக்காடு பகுதியில், 19 பேர் பயணம் செய்த டெம்போ டிராவலர் வாகனம் சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஓட்டுநர் சிலம்பரசன் உட்பட 16 பேர் காயமடைந்தனர்.

பழனி மதினா நகரைச் சேர்ந்த 19 பேர், கொடைக்கானலில் உறவினர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக டெம்போ டிராவலர் வாகனத்தில் சென்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் அதே வாகனத்தில் பழனிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது கொடைக்கானல் – பழனி சாலையில் சவரிக்காடு பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரத்தில் இருந்த சுமார் 100 அடி பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது.

இதில் வாகனத்தில் பயணம் செய்தவர்கள் சிக்கிக்கொண்டு அலறினர். அவர்களின் சத்தத்தைக் கேட்ட அவ்வழியாகச் சென்றவர்கள் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணி:

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பள்ளத்தில் இறங்கி மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் பழனியைச் சேர்ந்த ஷேக், பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த நிஜாமுதீன், அப்பாஸ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். வாகனத்தை ஓட்டிச் சென்ற சிலம்பரசன் உள்ளிட்ட 16 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களுக்கு பழனி அரசு மருத்துவமனையில் முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மீட்புப் பணியில் சிரமம்:

விபத்து இரவு நேரத்தில் நிகழ்ந்ததால், சுமார் 100 அடி பள்ளத்தில் இறங்கி மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் தீயணைப்புத் துறையினருக்கு சிரமம் ஏற்பட்டது. இருப்பினும், காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

விபத்து குறித்த தகவல் அறிந்த உறவினர்கள் ஏராளமானோர் பழனி அரசு மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

அதிகாரிகள் நேரில் ஆறுதல்:

விபத்து குறித்து தகவல் அறிந்த பழனி கோட்டாட்சியர் பிரியங்கா, சட்டமன்ற உறுப்பினர் ரவி மனோகரன், நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் ஆகியோர் பழனி அரசு மருத்துவமனைக்குச் சென்றனர்.

அங்கு சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் வலியுறுத்தினர்.

ஆவடி அருகே சாலையில் கிடந்த பூமாலையால் விபத்து: ஆட்டோ மீது மோதி இளைஞர் பரிதாப பலி!

 

 

MUST READ