விஜய் ஆண்டனி, அப்பா குட்டி பட ப்ரமோஷனுக்காக வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் உருவாகியிருந்த ‘அப்பா குட்டி’ திரைப்படம் நேற்று (நவம்பர் 20) வெளியானது. இப்படத்தை மு. மாறன் இயக்கியிருந்த நிலையில், பிரீத்தி அஸ்ரானி உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து இசையும் அமைத்திருக்கிறார். அப்பா – மகள் பாசப்பிணைப்பை மையமாக வைத்து எமோஷனல் கலந்த குடும்பப் படமாக உருவாகியிருந்த இப்படம், ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
இருப்பினும், ‘அப்பா குட்டி’ திரைப்படம் முதல் நாள் வசூலில் சுமாரான வசூலையே பெற்றுள்ளது. இந்திய அளவில் கிட்டத்தட்ட 30 முதல் 35 லட்சம் ரூபாய் வரை வசூலித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் விஜய் ஆண்டனி, வித்தியாசமான முயற்சியாக கோவை எக்ஸ்பிரஸ் ரயிலின் அன்ரிசர்வ்டு பெட்டியில் பயணித்துள்ளார். சக பயணிகளுடன் இயல்பாக உரையாடி, மறக்க முடியாத தருணங்களையும் உரையாடல்களையும் பகிர்ந்து கொண்டு அவர் மேற்கொண்ட இந்தப் பயணம் கவனம் பெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
