Homeசெய்திகள்மாவட்டம்அஞ்சுகிராமம் அருகே லாரி ஓட்டுநர் தற்கொலை: இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்ய தாய் கோரிக்கை –...

அஞ்சுகிராமம் அருகே லாரி ஓட்டுநர் தற்கொலை: இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்ய தாய் கோரிக்கை – 4-வது நாளாக உடலை வாங்க மறுப்பு!

-

- Advertisement -

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே லாரி ஓட்டுநர் சுதாகர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது தாய் கிருஷ்ணம்மாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார். இதற்கிடையே, சுதாகரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவல்துறையினர் மீது புகார் எழுதி வைத்த லாரி ஓட்டுநர்:

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே பால்குளம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வந்தவர் சுதாகர். லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இவர், அருகிலுள்ள ஒரு கட்டிடத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தனது மரணத்திற்கு காவல்துறையினரே காரணம் என்று குறிப்பிட்டு அவர் கடிதம் எழுதி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குப் பதிவு:

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அஞ்சுகிராமம் காவல் ஆய்வாளர் செல்வி மற்றும் உதவி ஆய்வாளர் பிரியா ராஜ்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆனால், அவர்கள் மீது தற்கொலைக்குத் தூண்டியதற்கான சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், அதுவரை சுதாகரின் உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், சுதாகரின் உடல் நான்காவது நாளாகவும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ளது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தாய் மனு:

இந்த நிலையில், சுதாகரின் தாய் கிருஷ்ணம்மாள் மற்றும் பொதுமக்கள் நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுவில், தனது மகனின் தற்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால், கன்னியாகுமரி காவல் நிலையத்தில் பாரதிய நாகரிக சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டத்தின் 194-வது பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை, தற்கொலைக்குத் தூண்டியதற்கான சட்டப்பிரிவாக மாற்றாமல் காலம் தாழ்த்தப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இதுவரை சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைது செய்யப்படவில்லை என்றும், இதனால் தனது மகனின் உடலை மதச் சடங்குகளின்படி நல்லடக்கம் செய்ய முடியாமல் தவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, உடனடியாக வழக்கின் சட்டப்பிரிவை மாற்றி, சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளரைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

முதல்வர் தனிப்பிரிவு, மனித உரிமை ஆணையத்திற்கும் மனு:

இந்த மனுவின் நகல்கள் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு, உள்துறை அமைச்சர் மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், சுதாகரின் உடலைப் பெற மறுத்து உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

செக்கானூரணி காவல் நிலையத்தில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிக்கை – காவல்துறையினருக்கு நீதிபதிகள் எச்சரிக்கை!

MUST READ