Homeசெய்திகள்க்ரைம்சென்னை தியாகராய நகரில் போலி காசோலை கொடுத்து நகைக் கடைகளில் தொடர் மோசடி – பக்கவாதத்தால்...

சென்னை தியாகராய நகரில் போலி காசோலை கொடுத்து நகைக் கடைகளில் தொடர் மோசடி – பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 60 வயது நபர் கைது!

-

- Advertisement -

மருத்துவத் தகுதிச் சான்று கிடைக்காததால் ஜாமீனில் விடுவிப்புசென்னை தியாகராய நகரில் போலி காசோலை கொடுத்து நகைக் கடைகளில் தொடர் மோசடி – பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 60 வயது நபர் கைது!

சென்னை தியாகராய நகர் மற்றும் தேனாம்பேட்டை பகுதிகளில் உள்ள பல்வேறு நகைக் கடைகளில் போலி பணப் பரிவர்த்தனை மற்றும் காசோலை மோசடியில் ஈடுபட்டதாக 60 வயது நபர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவத் தகுதிச் சான்று கிடைக்காததால், போலீசார் ஜாமீனில் விடுவித்து விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலையில் உள்ள பாத்திமா ஜுவல்லரியில் வெள்ளிப் பிரிவு மேலாளராக ஹாஜா நஜ்முதீன் பணியாற்றி வருகிறார். கடந்த 5ஆம் தேதி மாலை சுமார் 5 மணியளவில் கடைக்கு வந்த நபர் ஒருவர், 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெள்ளித் தட்டைத் தேர்வு செய்துவிட்டு, கடையின் வங்கிக் கணக்கு எண்ணைப் பெற்றுச் சென்றுள்ளார்.

பின்னர் இரவு மீண்டும் கடைக்கு வந்த அவர், கடையின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியதாகக் கூறி குறுஞ்செய்தியைக் காட்டி வெள்ளிப் பொருட்களைப் பெற்றுச் சென்றுள்ளார்.

ஆனால், அன்றிரவு கடையின் வங்கிக் கணக்கைச் சரிபார்த்தபோது பணம் வரவு வைக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து கடை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், தியாகராய நகர் ராமகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்த மனோகர் (60) என்பவர் மீது மாம்பலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், மனோகர் பல்வேறு நகைக் கடைகளிலும் இதேபோன்ற மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. தியாகராய நகர் உஸ்மான் சாலையில் உள்ள ஸ்ரீ குமரன் தங்க மாளிகையில் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி 146.500 கிராம் எடையுள்ள வெள்ளித் தட்டுகளை 33,197 ரூபாய்க்கும், கடந்த 6ஆம் தேதி ஜிஆர்டி நகைக்கடையில் 358.950 கிராம் எடையுள்ள வெள்ளித் தட்டுகளை 80,300 ரூபாய்க்கும் பெற்றுக்கொண்டு பணம் செலுத்தாமல் ஏமாற்றியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, கடந்த 24ஆம் தேதி காலை தேனாம்பேட்டை கதீட்ரல் சாலையில் உள்ள எல்.கே.எஸ். ஜுவல்லரிக்குச் சென்ற மனோகர், 14 கிராம் தங்க நகை வாங்க விரும்புவதாகக் கூறி கடையின் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்றுள்ளார்.

பின்னர் 1 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அந்த நகைக்கடையின் ஆக்சிஸ் வங்கி கிளையில் செலுத்தியுள்ளார்.

வங்கியின் முத்திரையிடப்பட்ட ரசீதையும் பெற்றுக்கொண்ட அவர், அதனை எடுத்துக்கொண்டு அன்று இரவு 7 மணியளவில் மீண்டும் நகைக்கடைக்குச் சென்றுள்ளார்.

காசோலையை வங்கியில் செலுத்திவிட்டதாகவும், கடையின் வங்கிக் கணக்கைச் சரிபார்த்துக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார். கடை ஊழியர்கள் வங்கிக் கணக்கைச் சரிபார்த்தபோது பணம் வரவு வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.

இருப்பினும், மனோகரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஊழியர்கள் அவரிடம் தொடர்ந்து பேசியபடி இருந்துள்ளனர். அப்போது, ஏற்கனவே வரவு வைக்கப்பட்டிருந்த தொகை மீண்டும் வங்கிக் கணக்கிலிருந்து கழிக்கப்பட்டதாகக் குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதையடுத்து சந்தேகமடைந்த நகைக்கடை உரிமையாளர் மனோகரை பிடித்து வைத்துக்கொண்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜா, மனோகரைப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தியாகராய நகரில் உள்ள ரீகன் ஜுவல்லரியிலும் போலியான காசோலை கொடுத்து நகை வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தேனாம்பேட்டை போலீசார் மனோகரை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே, மனோகருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு பக்கவாதம் ஏற்பட்டு இடது கை மற்றும் இடது கால் செயலிழந்ததாகத் தெரியவந்தது. அவரை மருத்துவப் பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்ததால் மருத்துவர்கள் மருத்துவத் தகுதிச் சான்று வழங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், பாண்டி பஜார் போலீசார் மனோகரை ஜாமீனில் விடுவித்ததுடன், விசாரணைக்கு அழைக்கும்போது காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

தியாகராய நகர் மற்றும் தேனாம்பேட்டை பகுதிகளில் உள்ள நகைக் கடைகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தத் தொடர் மோசடி சம்பவம் வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் ரூ.19 லட்சம் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் – துபாய் செல்லும் பயணியிடம் ஒப்படைக்க முயன்ற ஒப்பந்த ஊழியர் கைது!

MUST READ