700-க்கும் மேற்பட்ட சென்டம் மதிப்பெண்கள் பெற்ற கடலூரின் 2 தனியார் பள்ளிகள் – தேர்வு முறைகேடு உறுதி; 2027 முதல் தேர்வு மைய அங்கீகாரம் ரத்து!
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2025ஆம் ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில், வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையில் முழு மதிப்பெண்களைப் பெற்ற இரண்டு தனியார் பள்ளிகளின் தேர்வு மைய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொல்லுக்காரன்குட்டை பகுதியில் உள்ள வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் காட்டுமன்னார்கோவிலில் உள்ள ஜி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளுக்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் வேதியியல், இயற்பியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களில் இந்த இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் சென்டம் மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர்.
அதன்படி, வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 424 சென்டம் மதிப்பெண்களும், ஜி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 334 சென்டம் மதிப்பெண்களும் பதிவாகியிருந்தன.
இதற்கு முந்தைய 2023-24 கல்வியாண்டில் இந்தப் பள்ளிகளில் முறையே 38 மற்றும் 174 சென்டம் மதிப்பெண்கள் மட்டுமே பதிவாகியிருந்தன. ஒரே ஆண்டில் மதிப்பெண்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்தது சந்தேகத்தை ஏற்படுத்தியதால், தேர்வு முறைகேடு தொடர்பாக பள்ளிகள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன.
இதற்கிடையே, 2026 மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வின்போது குறிப்பிட்ட தேர்வு மையங்களில் முறைகேடு நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில் அரசு தேர்வுகள் இயக்ககம் புதிதாக விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்த விசாரணையில் தேர்வு முறைகேடு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட இரண்டு பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டிருந்த தேர்வு மைய அங்கீகாரத்தை 2027 மார்ச் மாதம் முதல் ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், சம்பந்தப்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்ற பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்ததாகவும், தலைமை கல்வி அலுவலர் நடத்திய விசாரணையில் முறைகேடு எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது அரசு தேர்வுகள் இயக்ககத்தின் விசாரணையைத் தொடர்ந்து தேர்வு மைய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் தங்களது பள்ளிகளுக்கு அருகிலுள்ள மாற்றுத் தேர்வு மையங்களை அடையாளம் காண வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.
இதனால், 2027 மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வை இந்த இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மாற்றுத் தேர்வு மையங்களில் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் சென்டம் மதிப்பெண்கள் பெற்ற இரண்டு தனியார் பள்ளிகளின் தேர்வு மைய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
