ராதாபுரம் கால்வாய் பாசன நீரை அனைத்து கண்மாய்களுக்கும் சமமாகப் பகிரக் கோரிய வழக்கு – விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு மதுரை அமர்வு உத்தரவு!
ராதாபுரம் பிரதான கால்வாயில் இருந்து பாசனத்திற்காகத் திறக்கப்படும் தண்ணீரை அனைத்து கண்மாய்களுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், விவசாயிகளின் நிலை குறித்து நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், ராதாபுரம் கால்வாயை நம்பியுள்ள கண்மாய்கள் எத்தனை, அவை எவ்வளவு தொலைவில் அமைந்துள்ளன என்பது குறித்த விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய அரசுத் தரப்புக்கு மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ராதாபுரம் கால்வாய் கடைமடை விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் சுந்தரலிங்கம் தாக்கல் செய்த மனுவில், ராதாபுரம் பிரதான கால்வாய் மூலம் சுமார் 52 கண்மாய்களுக்குத் தண்ணீர் செல்கிறது என்றும், கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும்போது கடைமடைப் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்குப் போதிய அளவு மற்றும் முறையான இடைவெளியில் பாசன நீர் கிடைப்பதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தற்போதைய பாசனப் பருவத்தில் கடந்த 16.06.2026 அன்று தண்ணீர் திறக்கப்பட்டபோதிலும், கால்வாயின் கடைமடைப் பகுதிகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட கண்மாய்களுக்குப் போதிய தண்ணீர் சென்றடையவில்லை என்றும், இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே, பாசன நீர் அனைத்து கண்மாய்களுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதி செய்யவும், இதற்காக உரிய கூட்டு கண்காணிப்புக் குழுவை அமைக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், கடந்த ஜூன் 16ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதாகவும், மொத்தமுள்ள 52 கண்மாய்களில் 42 கண்மாய்கள் நிரம்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மழைப் பற்றாக்குறை காரணமாக அனைத்து கண்மாய்களுக்கும் தண்ணீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள், “அதற்காக எப்போதும் கடைசியில் இருக்கும் விவசாயிகள் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது. அங்கு விவசாயம் செய்பவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான். அவர்களும் பிழைப்பு நடத்த வேண்டும்” என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து, கண்மாய்களைத் தூர்வாரி பராமரிப்பதற்காக ரூ.650 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தும், பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இதற்கு கருத்து தெரிவித்த நீதிபதிகள், எல்லாப் பணிகளுக்கும் அரசையே எதிர்பார்த்துக் காத்திருக்கக் கூடாது என்றும், முன்பெல்லாம் கிராம மக்களே ஒன்றிணைந்து இதுபோன்ற பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டனர்.
மேலும், “டாஸ்மாக்கிற்கும், அரசியல் கூட்டங்களுக்கும் செல்வதைத் தவிர வேறு எதற்கும் மக்கள் வெளியே செல்வதில்லை. விவசாய வேலைக்குக் கூட பிற மாநிலத் தொழிலாளர்களை அழைத்து வரும் நிலை உள்ளது” என நீதிபதிகள் வேதனையுடன் கருத்து தெரிவித்தனர்.
அனைத்து விவசாயிகளுக்கும் பாசன நீர் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதற்கான கொள்கை முடிவை அரசு உருவாக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், ராதாபுரம் கால்வாயை நம்பியுள்ள கண்மாய்கள் எத்தனை, அவை எவ்வளவு தொலைவில் அமைந்துள்ளன என்பது தொடர்பான விரிவான அறிக்கையை அரசுத் தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
