திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த மலைப்பகுதியும் மத்திய ரிசர்வ் காவல் படையின் (CRPF) பாதுகாப்புக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்று தீபம் ஏற்றுவதற்காகப் பக்தர்கள் ஒருபுறம் திரண்டு வரும் நிலையில், சிக்கந்தர் தர்காவில் நடைபெறும் சிறப்புத் தொழுகையில் பங்கேற்க இஸ்லாமியர்களும் மறுபுறம் குவிந்து வருகின்றனர். இதனால் திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
களத்தில் இறங்கிய 130 அதிரடிப் படை வீரர்கள்:
நேற்று நள்ளிரவு 12 மணியளவில் 130 சிஆர்பிஎப் (RAF) கலவரத் தடுப்பு அதிரடிப் படை வீரர்கள் முதற்கட்டமாகத் திருப்பரங்குன்றத்தில் களமிறக்கப்பட்டனர். இதையடுத்து மலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அதேநேரத்தில், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் அடங்கிய புதிய நீதிபதிகள் குழுவினர் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தனர். இதையடுத்து அவர்கள் ஆய்வு மேற்கொள்வதற்காகக் கோயிலுக்குச் சென்றுள்ளனர்.
தர்காவுக்குச் செல்லும் இஸ்லாமியர்களுக்குக் கடும் சோதனை:
சிக்கந்தர் தர்காவில் நடைபெறும் சிறப்புத் தொழுகையில் பங்கேற்பதற்காக வரும் இஸ்லாமியர்கள் காவல்துறையின் தீவிர சோதனைக்குப் பிறகே மலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆரம்பத்தில் வெளிமாநிலங்களிலிருந்து வந்த சிலர் தங்களது வழிபாட்டு உரிமை தொடர்பாகக் கேள்வி எழுப்பி தயக்கம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், காவல்துறையினர் தங்களது பாதுகாப்பு நடைமுறைகளைத் தெளிவுபடுத்தியதைத் தொடர்ந்து, அவர்கள் சோதனைக்கு ஒத்துழைத்து தர்காவிற்குச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரக் கண்காணிப்பில் பாதுகாப்புப் படையினர்:
தீபம் ஏற்றுவதற்காக வரும் பக்தர்களும், தர்கா தொழுகையில் பங்கேற்க வரும் இஸ்லாமியர்களும் ஒரே நேரத்தில் மலைப்பகுதியில் கூடுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், பாதுகாப்புப் படையினர் மலைப்பகுதி முழுவதும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பரங்குன்றத்தில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
