
இலங்கையில் 1983-ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்த ‘கருப்பு ஜூலை’ கலவரம் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக 11 பேர் கொண்ட நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அந்நாட்டு அரசு அமைத்துள்ளது.
இந்தக் குழுவுக்கு மகளிர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாவித்ரி பால்ராஜ் தலைமை வகிப்பார் என்று இலங்கை நாடாளுமன்றத் தலைவர் ஜகத் விக்ரமரத்ன சனிக்கிழமை அறிவித்தார்.
3,000 தமிழர்கள் படுகொலை:
இலங்கையின் வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 1983-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி முதல் ஜூலை 30-ஆம் தேதி வரை நாடு முழுவதும் தமிழர்களுக்கு எதிரான வன்முறை வெடித்தது.
‘கருப்பு ஜூலை’ என்று குறிப்பிடப்படும் இந்தக் கலவரத்தில் சுமார் 3,000 தமிழர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. தமிழர்களின் வீடுகள், கடைகள் மற்றும் சொத்துகள் தாக்கப்பட்டு, பலர் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் இலங்கையின் இன மோதலை மேலும் தீவிரப்படுத்திய முக்கியமான வரலாற்று நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
சுமார் 30 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போர்:
தமிழர்களுக்கு தனி நாடு கோரி ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் அமைப்பு, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தியது. இதனால் இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நீண்டகால உள்நாட்டுப் போர் நடைபெற்றது.
2006-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய இறுதிக்கட்டப் போர், 2009-ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றிலும் தோற்கடிக்கப்பட்டதாக இலங்கை ராணுவம் 2009 மே 18-ஆம் தேதி அறிவித்தது.
இந்த நீண்டகாலப் போரில் இருதரப்பிலும் பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. குறிப்பாக இறுதிக்கட்டப் போரில் ராணுவ வீரர்கள் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இழப்பீடு, நல்லிணக்கம் குறித்து பரிந்துரைகள்:
இந்நிலையில், கருப்பு ஜூலை கலவரத்தின்போது பாதிக்கப்பட்டவர்களின் நிலை, அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் மற்றும் அதன் நீண்டகாலத் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய புதிய நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான பரிந்துரைகளை அளிப்பதுடன், நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளையும் இக்குழு பரிந்துரைக்கும் என்று நாடாளுமன்றத் தலைவர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர்.
சுமார் நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு கருப்பு ஜூலை கலவரத்தின் பாதிப்புகள் குறித்து நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் ஆய்வு மற்றும் பரிந்துரைகள் இலங்கையின் இன நல்லிணக்கம், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி மற்றும் இழப்பீடு தொடர்பான விவாதங்களில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
