பாஜக பக்கம் வர வாய்ப்பில்ல ராஜா… ஹெச்.ராஜாவுக்கு சீமான் நச் பதில்
ராகுல் காந்தி மேல் முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள விவகாரம் பழி வாங்கும் நடவடிக்கை, ஜனநாயக படுகொலை, மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை தகுதி நீக்கம் செய்தால் அப்புறம் எதற்காக தேர்தல்? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் விராலிமலையில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டம் உள்ளிட்டவற்றில் பங்கேற்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதுக்கோட்டைக்கு வருகை தந்துள்ளார். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “மகளிர் உரிமைத்தொகை பெற வேண்டும் என்றால் யாசகம் பெறுபவர்களாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் விதிமுறைகள் உள்ளது. அவர்கள் சொல்லியிருக்கும் விதிமுறைகள் படி இருந்தால் ஏன் ஆயிரம் ரூபாய் கேட்க போகிறோம்? இதற்கு இந்த மக்களை அவமானப்படுத்தாமல் பேசாமல் விட்டிருக்கலாம். ஆயிரம் ரூபாய் யாரும் கேட்கவில்லை, இவர்களாகத்தான் அறிவித்தார்கள், பிறகு விதிமுறைகள் விதிப்பது கொடுமையானது.

விஜய் அரசியலுக்கு வரட்டும், தமிழர்களுக்கு நிறைய பிரச்சனைகள் உள்ளது அவரும் களத்தில் நின்று போராடட்டும் வேலை செய்யட்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவேன், அதில் யாருக்கும் எந்த ஐயமும் வேண்டாம். தற்போது தேர்தலுக்கான சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளது. அடுத்த முறை ஜனவரி மாதம் வரும் பொழுது வேட்பாளர் உடன் வருவேன். அதுவே நவம்பரில் அறிவிப்பு வந்து விட்டால் நவம்பரிலிருந்து வருவேன். பேனா சிலை வைத்தால் அதை உடைப்பேன். ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கி விட்டால் நான் அதைக் கேட்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினார்.
ஹெச்.ராஜா தமிழ் தேசியத்தை விட்டு விட்டு வந்தால் சீமானை ஏற்றுக் கொள்வோம் என்று கூறியதற்கு பதில் அளித்த சீமான், அவருக்கு ஒரே பதில் தான் வாய்ப்பில்லை ராஜா? பாசமாக ஹெச். ராஜா கூப்பிட்டாலும் அவர் வீட்டுக்கு வரட்டும் தனது மனைவி மாட்டு கறி சமைப்பார் சாப்பிட்டுவிட்டு இருவரும் பேசிக் கொண்டிருப்போம். நட்பு வேறு, உறவு வேறு, அரசியல் கோட்பாடு வேறு, இவ்வளவு நாள் அணுகாமல் திடீரென்று அணுகுவதற்கு நான் வளர்வது தான் காரணம்.