கொள்ளை, ஊழல் தான் புதுச்சேரி அரசின் நோக்கம்- நாராயணசாமி
மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு விவகாரத்தில், புதுச்சேரி ஆளுநர், முதல் அமைச்சர், அமைச்சர்கள் மக்களுக்கு எதிரானவர்கள் என்பது தெளிவாகியுள்ளது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “5 மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் ரூ.500 மானியம் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இந்த அறிவிப்பு, தோல்வி பயத்தால் பிரதமர் மோடி சிலிண்டருக்கு ரூ.200, உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு ரூ.400 விலை குறைப்பு என கூறியுள்ளார். இது பாஜவுக்கு வாக்கு வங்கியை சேர்க்க மத்திய அரசு கடைபிடிக்கும் யுக்தி. தணிக்கை அறிக்கையில் மத்திய அரசின் 7 திட்டங்களில் ரூ.7.50 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாக கூறியுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் 2 ஜி பிரச்சனையை முன்வைத்து ஆட்சிக்கு வந்த மோடி இதற்கு பதில் அளிக்கவில்லை. மோடி அரசு ஊழல் மலிந்த அரசு என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்காததால் சென்டாக் கவுன்சிலிங் தொடங்காமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதோடு அரசு செவிலியர் கல்லூரி தொடங்கவும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதன் மூலம் புதுவை கவர்னர், முதல் அமைச்சர், அமைச்சர்கள் புதுவை மக்களுக்கு எதிரானவர்கள் என்பது தெளிவாகியுள்ளது. முதல் அமைச்சர் ரங்கசாமி அறிவித்த சிலிண்டர் மானியம் உள்ளிட்ட 3 மகளிர் திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை.
மத்திய அரசு சட்டமன்றம் கட்ட நிதி ஒதுக்கவில்லை. நிதியே ஒதுக்காத போது கோவா சட்டமன்றத்தை பார்க்க எம்எல்ஏக்கள் செல்வது எதற்காக.? புதுச்சேரியில் அறிவிக்கபட்ட திட்டங்கள், எதுவும் செயல்படுத்த முடியவில்லை. இது விளம்பரத்திற்காக செயல்படும் விளம்பரம் அரசு, புதுச்சேரி அரசு. புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பாக என் ஆர் காங்கிரஸ், பாஜக ஏன் டெல்லியை வலியுறுத்தவில்லை. புதுச்சேரியில் மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வு இன்னும் தொடங்கவில்லை. இந்தாண்டு மருத்துவ படிப்புக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அமல்படுத்தபடும் என்று ஆளுநர், முதல்வர் தெரிவித்தனர். ஆனால் இதுவரை அமலுக்கு வரவில்லை.
இது தொடர்பாக விளக்கம் அளிப்பது யார்? எனவே புதுச்சேரி மக்களுக்கு, இந்த அரசு துரோகம் செய்து வருகிறது. கொள்ளை, ஊழல் தான் புதுச்சேரி அரசின் நோக்கம். பொதுப்பணித்துறை, கலால், உள்ளாட்சிதுறை, காவல் துறையில் கமிஷன் தலைவிரித்து ஆடுகிறது. இது போன்ற ஆட்சியாளர்களால், புதுச்சேரி குட்டி சுவராகி விட்டது” என்றார்.