பள்ளி மைதானத்தின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்து 2 மாணவிகள் பலி.. அலட்சியமாக இருந்த பள்ளி நிர்வாகமே காரணம் என மக்கள் குற்றசாட்டு
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள சிக்கனாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ். இவரின் 10 வயது மகள் மோனிகா, அங்குள்ள அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்புப் படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த வேலு என்பவரின் 14 வயது மகள் ராஜலட்சுமி 9-ம் வகுப்புப் படித்து வந்தார். தோழிகளான இந்த 2 மாணவிகளும், நேற்று இரவு உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். வரும் வழியில், அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் தோண்டப்பட்டிருந்த 8 அடி ஆழமுள்ள மழைநீர் நிரம்பிய பள்ளத்துக்குள் 2 மாணவிகளும் விழுந்து, தத்தளித்தனர்.

இந்த மாணவிகளுடன் வந்த சிறுவன், அழுதபடியே ஓடிச்சென்று வீட்டில் தகவல் தெரிவித்துள்ளான். ஊர் மக்கள் விரைந்து ஓடிவந்து, பள்ளத்துக்குள் மூழ்கிய 2 மாணவிகளையும் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச்சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், 2 மாணவிகளும் உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். இந்த துயரச் சம்பவத்தால், அந்தக் கிராமமே சோகத்தில் மூழ்கியிருக்கிறது.
இதுபற்றி அப்பகுதிமக்கள் கூறுகையில், ‘‘சாலைப் போடுவதற்காகவும், பள்ளியைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் எழுப்புதவற்காகவும், இந்தப் பள்ளி வளாகத்திலேயே 7-ல் இருந்து 8 அடிக்கு பள்ளம் தோண்டி மண் அள்ளப்பட்டுள்ளது. மீண்டும் இந்தப் பள்ளத்தை மூடாமல், கடந்த 1 மாத காலமாக அப்படியே அலட்சியமாக விட்டதன் விளைவுதான் 2 மாணவிகளின் உயிர் பறிபோயுள்ளது.
இந்தச் சம்பவம், குறித்து அம்பலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். பள்ளத்தை மூடுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், ‘‘பள்ளத்தை உடனடியாக மூடியிருந்தால், இந்தச் சம்பவமே நடந்திருக்காது. இதில், அனைவருடைய பொறுப்புமே இருக்கிறது. இப்படியான துயரச் சம்பவம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து, பள்ளி நிர்வாகமோ, பஞ்சாயத்து நிர்வாகமோ, ஏன் தனிப்பட்ட மனிதர்களோ கூட பள்ளத்தை மூடியிருக்கலாம் என வருத்தத்துடன் கூறியுள்ளார்.