நடிகர் கார்த்தி அறிமுகமான பருத்திவீரன் திரைப்படம் 2007ம் ஆண்டு வெளியானது. தமிழ் சினிமாவின் திருப்புமுனை ஏற்படுத்திய திரை காவியமாக கொண்டாடப்பட்ட பருத்திவீரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, மற்றும் படத்தின் இயக்குனர் அமீர் ஆகியோரிடையே இருந்த விவகாரம் இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஓய்ந்த பாடில்லை. படத்தின் இயக்குனர் அமீர் தன்னை ஏமாற்றி பொய் கணக்கு கூறி பணத்தை திருடி போய் கணக்கு கூறியதாக ஞானவேல் ராஜா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். அவ்வப்போது இந்த பிரச்சனை குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணமே இருந்தன. இதில் உச்சகட்டமாக தற்போது ஞானவேல் ராஜா அளித்த பேட்டி ஒன்றில் அமீர் பணத்தை ஏமாற்றி தனக்கு துரோகம் செய்துவிட்டார் என கூறினார். இதனால் மனமுடைந்து போன அமீர் உண்மைகள் அனைத்தையும் அறிந்த நபர்களும் இதைப்பற்றி பேசாமல் என்னை புறந்தள்ளி விட்டீர்களே என்பது போன்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதன் காரணமாக பருத்திவீரன் படப்பிடிப்பின் போது அமீருடன் பணியாற்றிய சமுத்திரக்கனி தற்போது இந்த விவகாரம் பற்றி பேசியுள்ளார். அதில் ஞானவேல் ராஜா பருத்திவீரன் படத்தை பாதியில் கைவிட்டு விட்டதாகவும், அமீர் படத்தை முடித்தாக வேண்டும் என்ற முனைப்போடு தன் நண்பர்கள் உறவினர்கள் என சுமார் 60 பேரிடம் பணம் கடனாக பெற்று தான் படத்தையே முடித்தார் எனவும் கூறியுள்ளார். மேலும் பேருக்காக மட்டும் தன்னை தயாரிப்பாளர் எனக் கூறிக் கொள்ளும் ஞானவேல் ராஜாவுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சமுத்திரக்கனியின் இக்கருத்தை நடிகர் சசிகுமாரும் ஆதரித்துள்ளார். ஞானவேல் ராஜா தொடர்ந்து இந்த விவகாரத்தில் அமீரை பொய்யான விஷயங்களை கூறி விமர்சித்து வருவதை கண்டிப்பதாகவும் அவர்கள் கடிந்து கொண்டனர். அதேபோல அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த மௌனம் பேசியதே திரைப்படத்தின் தயாரிப்பாளரான கணேஷ் ரகுவும் இந்த விவகாரத்தில் அமிரின் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய் என்று பேட்டி அளித்துள்ளார். இவ்வாறாக இப்பிரச்சினை பூதாகரமாக வெடிக்க பல பிரபலங்கள் இயக்குனர் அமீருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் மீது கண்டனத்தை தெரிவித்தும் வருகின்றனர்.
- Advertisement -