குடித்துக் கொண்டே கார் ஓட்டி, வீடியோ பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக வலைதளம் மூலம் சென்னை போக்குவரத்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


சென்னை காவல்துறை சமூக வலைதள பக்கத்தின் மூலம் பொதுமக்கள் பல்வேறு புகார்கள் அளித்து வருகின்றனர். உடனுக்குடன் இந்த புகார்களை கவனித்து போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை கட்டுப்படுத்த பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்து, கடும் வாகன சோதனை நடத்தி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு போக்குவரத்து போலீசார் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்தெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அதனை குறைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும்நிலையில், வாலிபர்கள் சிலர் இதனை அவமதிக்கும் வகையில் இரவு நேரத்தில் மது அருந்தியவாறு காரை ஓட்டிக்கொண்டே செல்லும் காட்சியை வீடியோவாக எடுத்து தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். பிரமோத் மாதவன் என்ற பெயரிலான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மது அருந்தியவாறு கார் ஓட்டியதோடு அல்லாமல், சிகரெட் புகைத்துக் கொண்டு வாகனம் ஒட்டியவாறு வீடியோ பதிவு செய்யப்பட்டது வைரல் ஆகி வருகிறது.
இது போன்ற விதி மீறிய செயல்கள் இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் எனவும் , குடித்துவிட்டு வாகனம் ஓட்டலாம் என ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு சமூக வலைதள பக்கம் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Hello @ChennaiTraffic, In Instagram I found a person not just violating rules but posting it social media as a act of promoting or encouraging others to follow it I believe this act must punished. This is in Chennai Vehicle no : TN 06 Z 8157 #drukendrive #chennai #wronginfluence pic.twitter.com/ojZGsLqMXm
— LightStrike (@MrAnony95796331) January 9, 2023
இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் புகார் அளித்தவர் கொடுத்த வாகன எண் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீடியோ காட்சிகளை ஆய்வு செய்ததில் போரூர் சாலைகளில் வாகனம் ஓட்டியது தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபரையும் அழைத்து போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். மேலும் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


