கடந்த 2021 ஆம் ஆண்டு டிஜே ஞானவேல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இந்த படத்தில் சூர்யா, மணிகண்டன், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் நடிகர் மணிகண்டனுக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இதன் பின் மணிகண்டன் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான மத்தகம் என்ற வெப் தொடரில் வில்லனாக நடித்திருந்தார்.
இதற்கிடையில் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான குட் நைட் திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்திருந்தார். எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளியான இந்த குட் நைட் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மணிகண்டனின் எதார்த்தமான நடிப்பு பலரும் பாராட்டும் வகையில் அமைந்திருந்தது. இந்நிலையில் மணிகண்டன் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் மணிகண்டனுடன் இணைந்து கௌரி பிரியா ரெட்டி, கண்ணன் ரவி, ஹரிஷ் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதனை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. பிரபு ராம் வியாஸ் இயக்க ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பாக படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததாக படக்குழுவினர்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 7 மணி அளவில் வெளியாகும் எனவும், அதனை நடிகர் சிலம்பரசன் வெளியிட இருக்கிறார் எனவும் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -