பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ஓசூரில் வர்த்தக மையம் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.


இதுதொடர்பாக பேரவையில் உரையாற்றிய தங்கம் தென்னரசு, “நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வர்த்தக மையம், ஓசூர் வர்த்தக மையம் என்ற பெயரில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. புதிய தொழிற்சாலைகளில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பெறுவது தொடர்பாக அரசு ஆராயும். ஒசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழ்நாடு அரசு நடத்திய ஆய்வில் தற்போது இயங்கி கொண்டிருக்கும் தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள் 80% பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது,” எனக் கூறினார்.
இதேபோல் அவையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் 1775 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 970 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த அந்த மருத்துவமனைகளின் எண்ணிக்கை 1775 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ. 22 லட்சம் வரை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக முதல்வர் காப்பீடு திட்டத்தில் வழங்கப்படுகிறது. முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் 1.39 கோடி பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.திமுக ஆட்சி அமைந்த பின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பிரிமியம் தொகை ரூ.849 ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனக் கூறினார்.


