மின்சார பல்பை கண்டுபிடித்து உலகையே ஒளிரச் செய்த விஞ்ஞானி தாமஸ் ஆல்பா எடிசன், தனது வாழ்க்கையில் மட்டுமல்லாமல், மனிதநேயத்திலும் ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டாக விளங்கியவர்.
எடிசன் மின்சார பல்பை கண்டுபிடித்த பிறகு தன் நண்பர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் அந்த பல்பை ஒளிர வைத்து காட்டுவதற்காக ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார்.
அவரது ஆய்வகத்தின் மேல் தளத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. எடிசன் தனது உதவியாளரை அழைத்து மின்சார பல்பை மேல் தளத்திற்கு கொண்டு வரச் சொன்னார். அந்த உதவியாளர் பல்பை கொண்டு வருகையில் தரதிஷ்டவசமாக அது கை தவறி கீழே விழுந்து உடைந்துவிட்டது. அங்கிருந்த எல்லோரும் அதிர்ச்சி அடைந்தார்கள். உதவியாளரும் பதற்றமடைந்து விட்டார்.

ஆனால் எடிசன் எந்த பதற்றமும் அடையவில்லை அமைதியாக இருந்தாா். ஆயிரம் தோல்விகளை சந்தித்து மின்சார பல்பை உருவாக்கிய அவருக்கு மீண்டும் ஒரு மின்சார பல்பை உருவாக்குவது மிகவும் எளிதாக இருந்தது. சிறு முயற்சி செய்து மீண்டும் ஒரு பல்பை தயாரித்தாா்.
பின்னர், அதை மீண்டும் அதே உதவியாளரிடம் கொடுத்து மேலே கொண்டு வரச்செய்தார். பல்பை கீழே போட்டு உடைத்த அவரிடமே மீண்டும் அதே பணியை ஏன் கொடுக்கிறீர்கள்? என்று கேட்டனர்.
அந்த பல்ப் மீண்டும் உடைந்தாலும் என்னால் இன்னொரு பல்பை உருவாக்க முடியும். ஆனால் என்னுடைய உதவியாளரின் மனதை உடைத்து விட்டால் அதை என்னால் சரிசெய்ய முடியுமா? அதை நான் ஒருபோதும் சரிசெய்ய முடியாது! அதனால் தான் மீண்டும் அவரிடம் அதே பணியை கொடுத்தேன். அவர் அவரது பணியையும், பொறுப்பையும் என்னுடைய நம்பிக்கையும் அவர் நன்றாக உணர்ந்து இன்னும் சிறப்பாகப் பணியாற்றுவார். இந்த வார்த்தைகள் அங்கு இருந்த அனைவரையும் ஆழமாக சிந்திக்க வைத்தன.
அப்போதுதான் எடிசனுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்த அந்த பொறுமையின் முக்கியத்துவத்தை அங்கிருந்த அனைவரும் உணர்ந்தார்கள். எடிசன் ஆயிரம் முறை தோல்வி கண்டு ஒரு மின்சார பல்பை கண்டுபிடித்தார்.
அந்த பல்பை தனது உதவியாளரின் கை தவறி விழுந்து உடைந்ததற்காக எடிசன் திகைக்கவில்லை. நொந்து போகவில்லை. அந்த அதிர்ச்சிகரமான நிமிடங்களில் கூட அமைதியாக நடந்து கொண்ட நேர்மறை சிந்தனை உள்ள ஒரு அற்புதமான மனிதர் எடிசன்.
எடிசன் தனது பொறுமை, நேர்மறை சிந்தனை, மனிதநேயம் ஆகியவற்றால் உலகிற்கு ஒரு முக்கியமான பாடத்தை கற்றுக் கொடுத்தார். ஒரு தோல்வி பொருட்படுத்தத்தக்கது அல்ல, ஆனால் ஒருவரின் மனதை உடைப்பது சரிசெய்ய முடியாத தவறு. அந்த ஒரு நிமிடத்தில் எடிசனின் மனிதநேயம், பொறுமை, நம்பிக்கை ஆகியவை வெற்றியின் உண்மையான அர்த்தத்தை உலகுக்கு விளக்கியது.
மகா காலாஷ்டமி (நவம்பர் 12, 2025): கர்மப் பிணைப்பைத் தளர்த்தி விதியை மாற்றும் பைரவரின் அவதாரம்!


