வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் கழுத்தை நெரித்து கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க சங்கிலியை அறுத்து சென்ற ஆச்சாரியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவைச் சேர்ந்த 66 வயதுடைய மூதாட்டி இளஞ்சி தனது இளைய மகன் மோகனுடன் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி இளஞ்சியிடம் 15 வருடமாக பழக்கமான ராயபுரம் பகுதியை சேர்ந்த நகை செய்யும் ஆச்சாரி ஆறுமுகம் என்பவர் மூதாட்டி இளஞ்சியின் வீட்டிற்கு வந்து பேசிக் கொண்டு இருந்துள்ளார்.
ஐந்தாயிரம் ரூபாய் பணம் கேட்டு தொல்லை தந்துள்ளார் மூதாட்டி பணம் தர மறுத்ததால் வீட்டில் வளர்ப்பு நாயின் சங்கிலியை எடுத்து மூதாட்டியின் கழுத்தை நெரித்துள்ளார்.
இதில் அதிர்ச்சடைந்த இளஞ்சி மயக்கமாகவே, இறந்துவிட்டார் என நினைத்து துண்டு பேப்பரில் எனது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை என எழுதி வைத்து கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு ஆறுமுகம் தப்பி சென்றுள்ளார்.

அருகில் இருந்த வீட்டினர் வெகு நேரமாக மூதாட்டி வெளியே வராததால் உள்ளே சென்று பார்த்த பொழுது மயக்கமாகி விழுந்து கிடப்பது தெரிய வந்தது இதனை அடுத்து அவரது மகன் மோகனுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து இளஞ்சியின் மகன் மோகன் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
முகத்திலும் கழுத்திலும் காயமான மூதாட்டி இளஞ்சி அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் உண்மை வெளிவரவே ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர்.
