கவின் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு பயணம் செய்தவர்களில்
நடிகர் கவினும் முக்கியமானவர். அந்த வகையில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடித்திருந்த டாடா திரைப்படம் கவினுக்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது மட்டுமல்லாமல் ஒரு திருப்புமுனையாகவும் அமைந்தது. அதன் பிறகு கவினுக்கு பல பட வாய்ப்புகள் குவிகின்றன. அந்த வகையில் தற்போது ஸ்டார் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இன்னும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் இயக்குனர் நெல்சன் தயாரித்து வரும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சனின் உதவி இயக்குனர் சிவபாலன் இயக்குகிறார். அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இப்படம் கவின் ஆறாவது படமாகும். இதில் கவினுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் நடிகர் எஸ்ஜே சூர்யா கவினின் இந்த புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவின் வில்லாதி வில்லனாக கலக்கி வரும் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.