ஆர்.பி.சௌத்ரியின் மகனும் நடிகர் ஜீவாவின் அண்ணனுமான ரமேஷ், கடந்த 2005 இல் வெளியான ஜித்தன் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து புலி வருது, ஜித்தன் 2 ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். கடைசியாக ஃபர்ஹானா, ஜப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜித்தன் ரமேஷ் கதாநாயகனாக ரூட் நம்பர் 17 எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அபிலாஷ் ஜி தேவன் எழுதி இயக்கியுள்ளார். பிரசாந்த் பிரணவம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஓசேப்பச்சன் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன்பாகவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் ஜித்தன் ரமேஷ் இப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படம் வருகின்ற டிசம்பர் 29ஆம் தேதி தமிழகம் முழுவதும் வெளியாக இருப்பதாக பட குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

நேனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ஜித்தன் ரமேஷ் உடன் இணைந்து அருவி மதன், ஹரிஷ் பேரடி, அகில் பிரபாகர், ஜெனிபர் மேத்யூ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பாக படத்தின் டிரைலர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


