திருப்பூரில் மதிமுக சார்பில் சாமுண்டிபுரம் பகுதியில் 5,000 பெண்கள் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. 25ம் ஆண்டு பொங்கல் விழாவில் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பங்கேற்று புதுமண தம்பதியர்களுக்கு சீர்வரிசை வழங்கி துவக்கி வைத்தார்.


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதிமுகவின் தலைமை நிலைய செயலாளர் துரைவைகோ, “பொங்கல் போன்ற பண்டிகைகள் தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் இருக்கிறது. மதிமுக மட்டுமல்லாது அனைத்து இயக்கங்களும் சமத்துவ பொங்கல் விழாவை முன்னெடுத்து கொண்டாட வேண்டும். தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகம் மற்றும் தமிழ்நாடு குறித்து ஆளுநர் சர்ச்சை ஏற்படுத்தி வருவது அவர், சனாதன கொள்கைகளோடு செயல்பட்டு வருவதை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பாஜகவின் நிர்பந்தத்தின் காரணமாக அதிமுக அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதிமுகவும் ஒரு திராவிட இயக்கம்தான். ஆனால் தற்போது அதன் நிலைமை என்ன என்பதை தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் சிந்தித்து பார்க்க வேண்டும். அதற்கு யார் காரணம் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும், மேலும் கோவையில் உள்ள ஈஷா தியான மையத்தில் யோகா பயிற்சிக்குச் சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.


