தனுஷ் நடிப்பில், அனிருத் இசையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 2012ம் ஆண்டு வெளியாகி இளைஞர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் “3“. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்படம் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக சென்னை வடபழனியிலுள்ள கமலா திரையரங்கில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக ஹவுஸ் ஃபுல் காட்சிகளாகவே இருக்கின்றது. சத்தமே இல்லாமல் ரீ ரிலீசில் சம்பவம் செய்து வருகிறது தனுஷின் “3”. பல 2k கிட்ஸ்கள், ரிலீஸ் ஆனபோது இப்படத்தை திரையரங்குகளில் பார்க்க முடியாமல் போனதே என்ற வருத்தத்தை தற்போது ஹவுஸ்புல் காட்சிகளால் சரி செய்து கொள்கின்றனர். இந்நிலையில் கமலா திரையரங்கம் சார்பில் இப்படம் குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கடந்த ஒரு மாதத்தில்”3″ படத்திற்கான 80,000 க்கும் மேலான டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் பல காட்சிகள் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கின்றன என்றும் கூறியுள்ளனர்.
மேலும் கமலா திரையரங்கில் இந்த ஆண்டு அதிகம் பார்வையாளர்கள் பார்த்து ரசித்த திரைப்படமாக “3” படம் நம்பர் 1 இடத்தில் உள்ளது. இத்திரையரங்கத்தின் உரிமையாளர் விஷ்ணு கமல் (டிசம்பர் 26) இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக தனுஷ் தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். மேலும் திரையரங்க உரிமையாளர் விஷ்ணு கமல், தனுஷை இது தொடர்பாக நேரில் சந்தித்ததாகவும் அப்போது தனுஷ் தன்னுடைய அடுத்த படத்திற்காக வித்தியாசமான லுக்கில் இருந்தார் எனவும், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். 3 படத்தின் இந்த சாதனை தனுஷ் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- Advertisement -


