நடிகர் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சலார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் 500 கோடியை கடந்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ் மாருதி இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இதில் பிரபாஸுடன் இணைந்து மாளவிகா மோகனன், நிதி அகர்வால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில் இப்படம் உருவாகிறது. இந்த படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு பொங்கல் எண்ணத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த படத்தில் நடிகர் யோகி பாபு நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் புதிய வரவாக நடிகை அம்மு அபிராமி நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை அம்மு அபிராமி தமிழ் சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பைரவா படத்தின் மூலம் அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து விஷ்ணு விஷாலின் ராட்சசன், தனுஷின் அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். மேலும் யானை, தண்டட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான கண்ணகி திரைப்படத்திலும் அம்மு அபிராமி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


