பிரபல இயக்குனர் கோகுல் ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜூங்கா, காஷ்மோரா உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்றவர். சமீபத்தில் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் சிங்கப்பூர் சலூன் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார் கோகுல். ஆர்.ஜே. பாலாஜி சத்யராஜ் ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
அதே சமயம் இயக்குனர் கோகுல், விஷ்ணு விஷால் கூட்டணியில் புதிய படம் உருவாக இருப்பதாக அறிவிப்பும் வெளியானது. அதன்படி இந்த புதிய படத்தை விஷ்ணு விஷால், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இயக்குனர் கோகுல் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தனது அடுத்த படத்தில் விஷ்ணு விஷால் வில்லனாக நடிக்கப் போவதாகவும், வேறொரு பெரிய நடிகர் தான் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்றும் கூறியிருக்கிறார். மேலும் இந்த படம் டார்க் காமெடி, ஆக்சன் உள்ளிட்டவைகள் நிறைந்த படமாக உருவாக இருப்பதாகவும் கூறியுள்ளார். கொள்ளையடித்தல் சம்பந்தமான கதைக்களத்தில் உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்டு இப்படம் உருவாக இருப்பதாக, படம் சம்பந்தமான பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். பான் இந்திய படமாக உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் மூன்று மாதங்களுக்குப் பிறகு 8 நாடுகளில் படமாக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
விஷ்ணு விஷால் ஏற்கனவே லால் சலாம், மோகன் தாஸ், ஆர்யன் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தொடர்ச்சியாக பல படங்களில் பிசியாக நடித்து வரும் விஷ்ணு விஷால் தற்போது வில்லனாக நடிக்க உள்ள தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.