அயலான் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
“இன்று நேற்று நாளை” பட இயக்குனர் ரவிக்குமார் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து இயக்கியுள்ள ஏலியன் கான்செப்ட் திரைப்படமான “அயலான்” கடந்த ஜனவரி
12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் வெளியான முதல் நாளில் 5.75 கோடி மட்டுமே வசூலித்தது. அடுத்தடுத்த நாட்களில் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் வெற்றிப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் பொங்கல் தினமான நேற்று 8 கோடிக்கு மேல் வசூலித்து, தற்போது வரை மொத்தமாக 50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் நாள் வசூலை விட நான்காம் நாள் வசூல் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. வித்தியாசமான கதைகளத்தில் இப்படம் உருவாகியிருந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் அதிகமாக இருந்தது. குழந்தைகளுக்கும் இப்படம் மிகவும் பிடித்திருப்பதால் பெற்றோர்கள் இந்த விடுமுறை தினத்திற்கு தங்கள் குழந்தைகளுடன் அயலான் படத்தை பார்க்க படையெடுத்து வருகின்றனர். தொடர்ந்து நான்கு நாட்கள் பொங்கல் விடுமுறையாக அமைந்ததால் அது இப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக மாறியுள்ளது. அடுத்து வரும் நாட்களில் அயலான் எந்த மாதிரியான சம்பவத்தை செய்யப்போகிறது, இறுதியாக எத்தனை கோடியை வசூல் செய்யப் போகிறது என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.