ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் வேட்புமனுவில் தான் போடும் கையெழுத்தை அங்கீகரிக்கவும், அதிமுக கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டதை தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. மூன்று நாட்களுக்குள் பதிலளிக்க ஓ.பி.எஸ்.சுக்கு நீதிபதிகள் உத்தரவு.


அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவியை உருவாக்கியதற்கு எதிராகவும், பொதுக்குழுவுக்கு எதிராகவும் ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து முடிந்த நிலையில் கடந்த 11ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க தரப்பு வேட்பாளரை அங்கீகரித்து இடைக்கால பொதுச் செயலாளர் என்று கையொப்பமிட்டு தான் அனுப்பும் வேட்பாளரை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்றும் இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக முறைப்படி வந்து முறையிடுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்த நிலையில்,இன்று காலை உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு எடப்பாடி பழனிச்சாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி மீண்டும் முறையட்டார்.

11-07-2022ல் அ.தி.மு.க பொதுக்குழு மூலம் திருத்தப்பட்ட கட்சி விதிமுறைகளை தேர்தல் ஆணைய இணையத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்.
ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் வேட்பாளரை அங்கீகரித்து போடும் கையொப்பத்தை ஏற்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் வழங்கிய கடிதத்தை ஏற்க உத்தரவு வழங்க வேண்டும்.
இது தொடர்பாக ஈ.பி.எஸ் தரப்பு இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டு, மனுவை விரைந்து விசாரணை செய்ய வேண்டும்.
மேலும் இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தையும் ஒரு எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதனை அடுத்து முறையீடுகளை ஏற்று உத்தரவுகளை பிறப்பித்த நீதிபதிகள், எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு மீதான விவரங்களை தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் ஓ.பி.எஸ் தரப்பிடம் வழங்க வேண்டும் என்றும், அந்த மனு மீது அடுத்த மூன்று நாட்களுக்குள் தேர்தல ஆணையம் மற்றும் ஓ.பி.எஸ் தரப்புபதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கு மீதான விசாரணை வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் தற்போதைய மனுவானது ஒரு குறிப்பிட்ட விவகாரம் தொடர்பானதாக இருப்பதால் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க காலதாமதம் செய்ய வேண்டாம் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
அதே நேரத்தில் இந்த வழக்கு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் சம்பந்தமாக மட்டுமே விசாரிக்கப்படும் என்றும் அதை தாண்டி வேறு எந்த ஒரு விவகாரமும் பரிசீலிக்கப்படாது எனவும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
