சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சிப் பூங்காவில் ‘கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு’ என்ற தலைப்பில் ஜி20 கருத்தரங்கு இன்று நடைபெறவுள்ளது.

ஜி20 உறுப்பு நாடுகள் இடையே கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை எவ்வாறு திறம்படப் பயன்படுத்துவது என்பது குறித்த கொள்கைகளை அடையாளம் காண்பதே இந்த கருத்தரங்கின் நோக்கம்.

இன்று முதல் பிப்ரவரி 2 வரை நடைபெறவுள்ள இந்த சந்திப்பில், முதல்நாளான இன்று ஜி20 உறுப்பு நாடுகளில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்கள் இடையே, ஆராய்ச்சி, கல்வி போன்றவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பகுதிகளை ஜி20 கல்விப் பணிக்குழு நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதனை தொடர்ந்து ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்காவில் 50 அரங்குகளுடன் கூடிய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆராய்ச்சி, புதுமை, திறன் சார்ந்த அம்சங்கள் இந்த அரங்குகளில் இடம்பெற்றிருக்கும். தொடர்ந்து இன்று மாலையில், கருத்தரங்கில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தையும் பார்வையிட உள்ளனர்.
புதிதாகப் புதுப்பிக்கப்பட்டு உள்ள ஐஐடி மெட்ராஸ் ஹெரிடேஜ் சென்டரில் இருந்து இக்கல்வி நிறுவனத்தின் பல ஆண்டுகால வளர்ச்சியைப் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


