
தமிழகத்தில் உள்ள 48 கோவில்களில் நாளை முதல் இலவச நீர், மோர் வழங்கப்படும் என தமிழக இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை மண்ணடியில் உள்ள உருது பள்ளியில் புதிய வகுப்பறைகளை தமிழக இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது: வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பக்தர்களின் வசதிக்காக முதல்கட்டமாக 48 கோவில்களில் இலவச, நீர் மோர் பந்த அமைக்கும் திட்டம் நாளை முதல் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தொடங்கப்படவுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் தேவைகளை அறிந்து செயல்படுபவர் என்பதால் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே கோவில்களில் இலவச நீர், மோர் பந்தல்களை அமைக்க உத்தரவிட்டுள்ளார். முதல்கட்டமாக 48 கோவில்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், இதனை தொடர்ந்து போக போக விரிவுப்படுத்தப்படுவது குறித்து அறிவிக்கப்படும் எனவும் கூறினார். கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் இந்த அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.