சவுண்ட் என்ஜினியராக திரையுலக வாழ்க்கையை தொடங்கி அந்த திரையுலகையே ஆண்டு வந்த நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கே.விஸ்வநாத் காலமானார். அவருக்கு வயது 92.
வயது முதிர்வு காரணமாக நோய்வாய்ப்பட்டு ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது. கே.விஸ்வநாத் மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய திரையுலக பிரமுகர்கள் நேரிலும் சமூக வலைதளங்களிலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய சினிமாவின் பிரதான இயக்குநர்களில் ஒருவர்தான் கே.விஸ்வநாத். 1930ம் வருடம் பிப்வரி மாதம் 19ம் தேதி ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பிறந்தவர் விஸ்வநாத். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும் நாகேந்திரநாத், ரவீந்திரநாத் என்ற மகன்களும், பத்மாவதி என்ற மகளும் உள்ளனர். ஸ்டூடியோ ஒன்றில் சவுண்ட் என்ஜினியராக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார் விஸ்வநாத். இயக்குநர் ஆவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டார். அதன்பின்னர் தெலுங்கு திரையுலக இயக்குநர் அடுர்த்தி சுப்பாராவிடம் உதவி இயக்குநருக்கான வாய்ப்பு கிடைத்தது விஸ்வநாத்திற்கு. பின்னர் இயக்குநர் பாலசந்தர், பாபு என பிரபல இயக்குநர்களிடம் சினிமாவை இயக்குவதை கற்றுக்கொண்டார்.
சினிமா இயக்கத்தை கற்றுக்கொண்ட விஸ்வநாத் 1965ம் ஆண்டு முதன் முதலாக தெலுங்கில் ஆத்ம கவுரவம் என்ற திரைப்படத்தை இயக்கினார். ஆந்திர மாநில எழுத்தாளரான எடானபுரடி சுலோச்சனா ரவி எழுதிய ஆத்ம கவுரவம் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் நாகேஸ்வர ராவ் காஞ்சனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சிறந்த திரைப்படத்திற்காகவும், சிறந்த கதை அம்சத்திற்காகவும் நந்தி விருதுகளை தட்டிச் சென்றது தெலுங்கு மொழி படமான ஆத்ம கவுரவம்.
பின்னர் இவர் கலாசக்தி கே.விஸ்வநாத் என்றே அழைக்கப்பட்டு வந்தார். இந்தி சினிமாவின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் தாதா சாகேப் பால்கே. இந்தியாவின் முதல் சினிமாவானா ராஜா ஹரிச்சந்திரா என்ற படத்தை இயக்கியவர் தாதா சாகேப் பால்கே. இந்திய சினிமாவில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு பால்கே விருது வழங்கப்படுவது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. இந்த விருது 2016ம் ஆண்டு கே.விஸ்வநாத்திற்கு கிடைத்தது தெலுங்கு ரசிகர்களை ஆழ்ந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கு முன்பாக சத்யஜித்ரே, ராஜ் கபூர், லதா மங்கேஷ்கர், சிவாஜி கணேசன், கே.பாலச்சந்தர் ஆகியோருக்கு அந்த விருது கொடுக்கப்பட்டிருந்தது. 1992ம் ஆண்டு நடிகரும், இயக்குநருமான கே.விஸ்வநாத்திற்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி அவரை கவுரவித்தது. 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய கே.விஸ்வநாத் தமிழ், தெலுங்கு, ஆங்கில மொழிகள் அத்துப்படியாக இருந்தது.
இவரது சங்கராபரணம், சாகர சங்கமம், ஸ்வாதி முத்யம் உள்ளிட்ட திரைப்படங்கள் காலத்தால் அழியாதவையாகும். 1983ல் இவரது இயக்த்தில் தெலுங்கில் உருவான சாகர சங்கமம் படத்தில் கமல்ஹாசன் நடிக்க இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் 3 பிலிம்பேர் விருதுகள், 2 நந்தி விருதுகள், 3 தேசிய விருதுகளை அள்ளிச் சென்றது. இந்த படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழ் திரை ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றது. அதுமட்டுமின்றி பல தியேட்டர்களில் இந்த படம் 150 நாட்களை தாண்டி திரையிடப்பட்டது. விஸ்வநாத்திற்கு மட்டுமல்ல திரையுலக வாழ்வில் கமல்ஹாசனுக்கும் இந்த படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
1987ல் கமல்ஹாசன் நடிப்பில், விஸ்வநாத் இயக்கத்தில் வெளியான ஸ்வாதி முத்யம் (தமிழில் சிப்பிக்குள் முத்து) ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். சவுண்ட் என்ஜினியராக வாழ்க்கையை தொடங்கிய கே.விஸ்வநாத் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என அனைத்து துறைகளிலும் ஆளுமையை செலுத்தினார். குருதிப்புனல், யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன், முகவரி போன்ற தமிழ் திரைப்படங்களில் தானும் ஒரு நடிகர் என தனது முகவரியை தெரிவித்திருந்தார்.
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் சினிமாவை ஆண்டுவந்த சவுண்ட் என்ஜினியரின் சப்தம் அடங்கிப் போன இழப்பு திரையுலகிற்கு மட்டுமல்ல… ரசிகர்களாகிய நமக்கும்தான்….