spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தலையங்கம்அமைச்சர் நாசருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை !

அமைச்சர் நாசருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை !

-

- Advertisement -

நாசர் தன்னை மாற்றிக் கொள்வாரா?

ஆவடி மாநகர திமுக செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் நாசரின் மகன் ஆசிம் ராஜா தலைமை கழகத்தால் அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக சன் பிரகாஷ் நியமனம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஆவடி முழுவதும் விவாதப் பொருளாக மாறியது.

we-r-hiring

 

திமுக ஆட்சிக்கு வந்த 20 மாதக் காலமாக பால்வளத்துறை அமைச்சர் நாசரின் செயல்பாட்டை பல தரப்பினரும் பல விதமாக விமர்சனம் செய்து வருகின்றனர். சட்டமன்ற தேர்தலின் போது நான் பழைய நாசர் இல்லை, இனிமேல் புதிய நாசராக செயல்படுவேன், இதற்கு முன்பு தெரிந்தோ தெரியாமலோ தவறுதலாக பேசியிருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று பட்டாபிராமில் நடந்த தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி கட்சியினர் மத்தியில் பேசினார். அப்போது எல்லோரும் ஆவடி நாசரா இப்படி பேசினார் என்று ஆச்சரியப்பட்டார்கள்.

தேர்தல் முடிந்தது 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது நாசர் வெற்றி பெறுவார் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் 55 ஆயிரம் வாக்கு வித்தியாசம் அவரே எதிர்பாராதது. இந்த வெற்றிக்கு யார் காரணம் என்பதை அப்போதே மறந்து விட்டார். தனக்கிருந்த செல்வாக்காலும், தனது மகனின் உழைப்பாலும் தான் வெற்றி பெற்றதாக வெளியில் பேசினார். என் மகன் தான் என்னை வெற்றி பெற வைத்தார் என்று தம்பட்டம் அடித்தார்.  2016 ல் நடந்த தேர்தலில் அவருடைய மகனால் தான் தோற்றார் என்பதை மறந்து விட்டார்.

 

2016ல் விருதுநகரை சேர்ந்த பாண்டியராஜன் ஆவடியில் 1300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது அவருடன் இருந்த உதவியாளர்கள் அனைவரும் வெளியூரை சேர்ந்தவர்கள். ஆவடியை பற்றி தெரிந்தவர்கள் உதவியாளர்களாக வைத்துக் கொள்ளக் கூடாதா? வெளியூர் உதவியாளர்களை வைத்து ஆவடியில் கொள்ளை அடிக்கிறார் என்று அப்போது நாசர் பல இடங்களில் பேசி வந்தார். ஆனால் தற்போது நாசரிடம் உதவியாளர்களாக இருப்பவர்கள் அனைவரும் வெளியூர் காரர்கள். ஆவடியில் அவருக்காகவும், கட்சிக்காகவும் உழைத்த ஒருவரையும் அவர் உதவியாளராக வைத்துக் கொள்ளவில்லை. எதற்காக வெளியூர் காரர்களை வைத்துக் கொண்டார் என்று அவருக்கும் அவருடைய மகன் ஆசிம் ராஜாவிற்கு மட்டுமே தெரியும்.

உள்ளாட்சி தேர்தலில் ஆசிம் ராஜா வியூகம்

 அப்பா அமைச்சர் ஆகிவிட்டார். இல்லை… இல்லை அப்பாவை அமைச்சராக்கிவிட்டோம். அடுத்தது தான் மேயராகி விட வேண்டும் என்ற பெரும் திட்டத்தோடு உள்ளாட்சி தேர்தலில் ஆசிம் ராஜா வியூகம் அமைக்க தொடங்கினார். கட்சியில் சீனியர், ஜூனியர் என்று எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தனக்கும் தன் குடும்பத்தினருக்கு மட்டும் எப்போதும் விசுவாசமாக இருப்பவர்களை தேடி பிடித்து வேட்பாளர்களாக தேர்வு செய்து அப்பாவிடம் பட்டியலை வழங்கினார். மகனின் சாணக்கிய செயல்பாட்டை கண்டு மெய்மறந்து போன அமைச்சர் நாசர் அந்த பட்டியலை அப்படியே ஓகே செய்து தலைமைக்கு அனுப்பி வைத்தார். உள்ளாட்சி தேர்தலில் ஆசிம் ராஜாவும் 4 வது வார்டில் வெற்றி பெற்றார்.

திமுக கூட்டணி வேட்பாளர்கள் அமோகமாக வெற்றியும் பெற்றார்கள். 4 வார்டுகளில் மட்டும் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர்களில் 2 பேரை திமுக விற்கு தூக்கி வந்தார்.

முதல் சறுக்கல்

ஆவடி மாநகர மேயர் பதவி பட்டியல் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது அதனால் எப்படியாவது மேயர் பதவியை பிடித்துவிட வேண்டும் என்ற பெரும் திட்டம் தவிடு பொடியானது. தொடர்ந்து துணை மேயர் என்ற ஆசையிலும் மண் விழுந்தது. அப்பாவும் மகனும் சேர்ந்து மேயராக உதயகுமாரை தேர்ந்தெடுத்தார்கள். மதிமுக நகர செயலாளர் துணை மேயரானர். இவை அனைத்தும் ஆசிம் ராஜாவிற்கு ஏற்பட்ட பின்னடைவு. அப்போதும் சோர்ந்து போகாமல் மாநகர ஒப்பந்ததாரர்கள் குழு (திட்டக்குழு) தலைவரானார். மேயர், துணை மேயர், 4 மண்டலக்குழு தலைவர்கள் என்று அனைவரையும் அடக்கினார். ஆவடி மாநகராட்சியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து தன் ஆசையை கொஞ்சம் பூர்த்தி செய்துக்கொண்டார்.

என்னதான் தன் கட்டுப்பாட்டில் மாநகராட்சி இருந்தாலும் மரியாதை அனைத்தும் மேயர், துணை மேயர் என்று பதவியில் இருப்பவர்களுக்கு தான் கிடைக்கிறது. அதனால் புதிய திட்டத்தை வகுத்தார் ஆசிம் ராஜா. சத்தமே இல்லாமல் ஆவடி மாநகர திமுக செயலாளர் பதவியை வாங்கி வந்தார். ஆளும் கட்சியில் மாநகர செயலாளர் என்பது பெரிய பதவி. அதனால் அனைத்து இடங்களிலும் ஆசிம் ராஜாவிற்கே முதலிடம் கிடைத்தது. என்ன இருந்து என்ன பயன்? நமக்கென்று ஒரு அரசாங்க கார் இல்லை என்று ஆதங்கப்பட்டார். அதனால் மேயரின் காரை பறித்து பார்த்தார். துணை மேயருக்கு, மண்டலக்குழு தலைவர்களுக்கு கார் கொடுக்கக் கூடாது என்று தடுத்து பார்த்தார்.

மது, மாது, சூது போன்ற போதைகளை விட ஆபத்தானது அதிகாரபோதை. அதிகாரப் போதை ஒருவரை என்ன வெல்லாம் செய்யும் என்பதற்கு அமைச்சரின் நாசரின் மகன் ஆசிம் ராஜாவே உதாரணம்.

 

மாநகராட்சி மேயர், துணை மேயர், மண்டலக்குழு தலைவர்கள், மன்ற உறுப்பினர்கள் என்று எவரும் மாநகராட்சி நிர்வாகத்தில் தலையிடக்கூடாது என்றார். நான் சொல்வது மட்டுமே நிர்வாகம் என்று அனைவரையும் கட்டுக்குள் கொண்டு வந்தார்.

மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கத்தை ஓட விட்டார். தானே ஒப்பந்ததாரர், நான் சொல்பவர்கள் தான் ஒப்பந்ததாரர் என்றார். அதிகாரிகளை ஆட்டி படைத்தார். எல்லோரும் அலறினார்கள். இவை அனைத்தையும் அமைச்சர் நாசர் ரசித்தார்.

Home

எச்சரிக்கை !

இவை அனைத்தையும் உளவுத்துறை மூலமாகவும் மாநகராட்சி அதிகாரிகள் வாயிலாகவும் தகவலை அறிந்து கொண்ட  முதலமைச்சர் திடீரென்று ஆவடி மாநகர திமுக செயலாளர் பதவியில் இருந்து ஆசிம்ராஜாவை நீக்கினார். பதவி பெற்று ஐந்து மாதங்கள் கூட ஆகாத நிலையில்  பறிக்கப்பட்டுள்ளது. இது அமைச்சர் சா.மு.நாசருக்கு முதலமைச்சர் மறை முகமாக விடுத்த எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. அமைச்சர் நாசர் இதற்கு மேலாகிலும் தன்னை மாற்றி கொள்வாரா?

MUST READ