spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஓரணியில் தமிழ்நாடு - புதிய பாதையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஓரணியில் தமிழ்நாடு – புதிய பாதையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

என்.கே.மூர்த்தி

“ஓரணியில் தமிழ்நாடு” என்ற முழக்கத்தை முன்னெடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடுவீடாக சென்று உறுப்பினர்கள் சேர்க்கையை தொடங்கியுள்ளார். அவரை தொடர்ந்து அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என்று மாநிலம் முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகள் களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

we-r-hiring

2026 தேர்தலில் திமுகவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்கிற முழுவீச்சில் பாஜக, அதிமுக,த.வெ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. அதேபோன்று திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளும் கூடுதல் தொகுதிகள் கேட்போம் என்று முன்கூட்டியே அறிக்கை மேல் அறிக்கை கொடுத்து திமுக தலைமைக்கு நெருக்கடியை கொடுத்து வருகின்றனர்.

விசிக கட்சியின் முன்னணி நிர்வாகிகள் சிலர் ஒரு வருடத்திற்கு முன்னரே ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கேட்போம் என்று வெளிப்படையாக பேசத் தொடங்கினார்கள். அதை அக்கட்சியின் தலைவர் திருமாவளவனும் வழிமொழிந்து பேசினார். சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் சண்முகமும் கூடுதல் தொகுதியை கேட்போம் என்று பேட்டி அளித்துள்ளார். அந்த வரிசையில் மதிமுகவும் இணைந்துள்ளது. தொடர்ந்து கூட்டணி கட்சியினர் குடைச்சல் மேல் குடைச்சலை கொடுத்து வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய வியூகத்தை வகுத்து “ஓரணியில் தமிழ்நாடு” என்கிற முழக்கத்தை முன்னெடுத்து மக்களை நேரடியாகவே சந்திக்க தொடங்கிவிட்டார். திமுக நிர்வாகிகளையும் வீடுவீடாக செல்லுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஓராண்டிற்கு முன்பாகவே குடைச்சல் கொடுக்கும் கூட்டணி கட்சியினரிடம் கெஞ்சி, சமாதானம் பேசுவதை விட நேரடியாக மக்களிடம் சென்று குறை நிறைகளை கேட்டு மக்களிடம் ஒரு விதமான நெருக்கத்தை ஏற்படுத்துவது எவ்வளவோ மேலானது என்று முடிவு எடுத்துவிட்டார் முதல்வர்.

மக்களோடு கூட்டணி என்று அறிவிப்பதற்கு பதிலாக ஓரணியில் தமிழ்நாடு என்று அறிவித்து மக்களை சந்திப்பதனால் திமுகவின் செல்வாக்கு பலமடங்கு உயரத் தொடங்கியுள்ளது. மக்களை சந்திக்கும் போது சாலை, குடிநீர், கழிவுநீர் போன்ற சிறு சிறு பிரச்சனைகளை சொல்கிறார்கள். அதை குறிப்பு எடுத்துக் கொள்ளும் நிர்வாகிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து சரி செய்து கொடுப்பதால் மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.

மக்களிடம் செல்; அவர்களுடன் வாழ்; அவர்களை நேசி; அவர்களிடம் கற்றுக்கொள்; அவர்களுக்கு தெரிந்ததிலிருந்து கட்டமைப்பை தொடங்கு என்கிற கோட்பாட்டை சீனத்தத்துவ ஞானி லாவோட்சு சொல்லி இருந்தாலும் இந்தியாவில் அறிஞர் அண்ணா அதை நடைமுறைப்படுத்தி சாதித்து காட்டினார்.

திராவிடர் முன்னேற்றக் கழகம் 1949 இல் தொடங்கிய காலம் பெரும் நிலக்கிழார்களும், மிட்டா மிராசுதாரர்களும் அரசியலில் இருந்த காலம். கல்வி, பொருளாதாரம் இல்லாத சாதாரண ஏழை மக்கள் அரசியல் பேசவே முடியாமல் இருந்த காலத்தில் அறிஞர் அண்ணா எளிய மக்களுக்கு ஒரு அண்ணனாகவும் , சகோதரனாகவும் உரிமையோடு பேசினார், அவர்கள் உண்ணும் உணவை உட்கொண்டார். அவர்களோடு வாழ்ந்தார். அவர்களை அரசியல் படுத்தினார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்தில் வறுமை, பஞ்சம் அதிகமாக இருந்தது. அப்போது சாதாரண எளிய மக்கள் தாங்கள் மன ஆறுதலுக்காக சாய்ந்து கொள்வதற்கு தோள்பட்டைக்காகவும், கண்ணீரை துடைக்கின்ற கரங்களுக்காகவும் காத்திருந்தார்கள். அப்போது அந்த மக்களின் கண்ணீரை துடைக்கும் வகையில் கரங்களை நீட்டி ஆறுதல் படுத்தியவர் அறிஞர் அண்ணா..

அறிஞர் அண்ணா மக்களிடம் சென்று அவர்களுக்கு தெரிந்த மொழியில் நாடகம் நடத்தினார், கலையின் வாயிலாக அரசியல் பேசினார். பழைய கஞ்சியை புதிய கோப்பையில் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சாதாரண சைக்கிள் கடைக்காரரையும் , குதிரை ஓட்டுபவரையும் சட்டமன்ற உறுப்பினராக்கி புதிய பாதையில் அழைத்து சென்றார்.

அரசியலில் மிட்டா மிராசுதாரர்களும், பண்ணையார்களும் ஆதிக்கம் செலுத்தி இருந்த காலகட்டத்தில் எளிய மனிதர்களை அரசியல் படுத்தி, கட்சி தொடங்கி 18 ஆண்டுகளில் ஒரு துளியும் ரத்தம் சிந்தாமல் ஆட்சியை பிடிப்பதென்பது சாதாரண காரியமல்ல; உலக அதிசியம். அதை அண்ணா செய்து காட்டினார்.

அறிஞர் அண்ணாவின் வழியில் முதல்வர் ஸ்டாலின் களத்தில் இறங்கி இருக்கிறார். இந்த புதிய அரசியல் வியூகத்தை கண்டு எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல கூட்டணி கட்சிகளுக்கும் கூட ஒரு விதமான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றி என்பது யாரோ சிலருக்கு மட்டும் சொந்தமானது அல்ல; அதற்கான உழைப்பையும், நேரத்தையும் செலவு செய்தால் யார் வேண்டுமானாலும் உரிமை கொண்டாடலாம் என்பதை அறிஞர் அண்ணா நிருபித்து காட்டினார். அதே வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் சாதித்து காட்டுவார்.

MUST READ