கல்வியில், சமூக ஒழுங்கில், பொருளாதாரத்தில், சிந்தனைத்திறனில் ஓரளவிற்கு வளர்ந்து தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருக்கிறது என்றால் அதற்கு யார் காரணம்?
இந்தியாவில் இன்று ஓரளவிற்கு ஆங்கிலம் பேசுகிறோம் என்றால், அதனால் இந்தியர்கள் உலகம் முழுவதும் அதிகாரத்தில் கோலோச்சிக்கிறார்கள் என்றால், அதனால் இந்திய சமூகத்தில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் தான். தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் தான் மூலக் காரணம்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே, அதாவது 1930-களின் பிற்பகுதியிலேயே தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் தொடங்கிவிட்டது.

1937-38 காலக்கட்டத்தில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளடங்கிய சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த இராஜாஜி குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியதோடு நிற்காமல், ஆரம்பப் பள்ளியில் இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்கினர். அதனை அப்போது எதிர்கட்சியாக இருந்த நீதி கட்சியினரும், சுயமரியாதை இயக்கத்தின் தலைவர் தந்தைப் பெரியாரும் கடுமையாக எதிர்த்து போராட்டம், மாநாடு, பேரணி நடத்தினார். அந்தப் போராட்டத்தில் பேரறிஞர் அண்ணா, மறைமலை அடிகள் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் பங்கேற்றனர்.
1938-ம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நடந்த இந்தி எதிர்ப்பு கண்டனக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய அறிஞர் அண்ணா கைது செய்யப்பட்டார். அவருக்கு 4 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதே ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட தந்தை பெரியார் கர்நாடக மாநிலம் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். போலீசாரின் தாக்குதலில் கும்பக்கோணத்தை சேர்ந்த தாளமுத்துவும், சென்னையை சேர்ந்த நடராஜனும் சிறையில் மரணம் அடைந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் மொழிப்போர் தியாகிகள் என்று போற்றப்பட்டனர். இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடித்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் 1939-ல் இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. போர் தொடர்பான ஆங்கில அரசின் அணுகுமுறைக்கு எதிராக பல மாகான காங்கிரஸ் அரசு பதவி விலகியது.
1940-ல் இராஜாஜியும் பதவி விலகினார். அப்போதைய ஆங்கிலேய கவர்னர் ஜான் எர்ஸ்கின் இந்தி கற்பதை கட்டாயம் என்கிற உத்தரவை ரத்து செய்தார்.
1947-ல் நாடு சுதந்திரம் அடைந்த போது ஜவகர்லால் நேரு தலைமையில் 15 பேர் கொண்ட தற்காலிக அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அதில் ஜவகர்லால் நேரு உள்ளிட்ட 6 பேர் மட்டுமே ஆங்கிலம் தெரிந்தவர்கள். மற்ற அமைச்சர்கள் இந்தி மற்றும் மாநில மொழிகளை மட்டும் அறிந்தவர்களாக இருந்தனர். புதிய அரசியல் அமைப்பின் படி இந்தியை ஆட்சி மொழியாக தேர்ந்தெடுத்தனர். மேலும் 15 ஆண்டு காலத்திற்கு இணை அலுவல் மொழியாக ஆங்கிலம் பயன்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. 1950 ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தில் இருந்து இந்த சட்டம் அமலுக்கு வந்தது.
1952 இல் முதல் பொது தேர்தல் நடைபெற்றது. அதில் ஜவகர்லால் நேரு தலைமையில் காங்கிரஸ் கட்சி வெற்றிப் பெற்றது. நேரு உள்ளிட்ட 21 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இராஜாஜி, என்.கோபால்சாமி அய்யங்கார் ஆகிய இருவரும் தேர்தலில் போட்டியிடாமல் அமைச்சரானார்கள். அப்போது ஆங்கிலம் தெரியாத அமைச்சர்கள் நான்கு பேர் இடம்பெற்றிருந்தனர்.
1952ல் மக்கள் தொகை 36 கோடி பேர். அதில் ஓரளவு கல்வி அறிவு பெற்றவர்கள் என்றால் வெறும் 6 கோடி பேர் மட்டுமே. சுமார் 30 கோடி பேர் பள்ளிக்கூடம் நிழலில் கூட ஒதுங்காதவர்களாக இருந்தார்கள்.
இணை அலுவல் மொழியாக ஆங்கிலம் நீடிக்கலாம் என்ற 15 ஆண்டு காலக்கெடு நெருங்கிய சூழ்நிலையில், 1965 ஜனவரி 26 ஆம் தேதி முதல் இந்தியை ஆட்சி மொழியாக ஆக்கியே தீருவோம் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. அப்போது தமிழ்நாட்டில் பக்தவச்சலம் முதலமைச்சராக இருந்தார். அறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.க. வேகமாக வளர்ந்து வந்த காலக்கட்டங்களில் மீண்டும் இந்தி திணிப்பு கொண்டுவரப்பட்டது. “இந்தி ஆட்சி மொழியாக கொண்டுவரும் ஜனவரி 26 துக்க நாளாக அனுசரிப்போம் என்று அண்ணா அறிவித்தார். இதற்கு சுதந்திரா கட்சியின் தலைவர் இராஜாஜியும் ஆதரவு தெரிவித்தார். (ஜவஹர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக 1959-ல் காங்கிரஸில் இருந்து விலகி சுதந்திரா கட்சியை தொடங்கினார்) தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழிக்கு எதிர்ப்பு கிளம்பியது.
1965 ஆண்டு நெருங்க நெருங்க நாடு கலவர பூமியாக மாறியது. போராட்டத்திற்கு தி.மு.க.விற்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் களத்தில் இறங்கினார்கள். தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்தி எதிர்ப்பு ஊர்வலம், ஆர்ப்பாட்டம், இந்தி எழுத்துக்கள் அழிப்பு, ரயில் மறியல், ரயில் நிலையங்கள் மீதும், தபால் நிலையங்கள் மீதும் தாக்குதல், தீவைப்பு, கல்வீச்சு, பொது சொத்துக்கள் சேதப்படுத்துதல் என்று தமிழ்நாடு கலவர பூமியாக மாறியது. நூற்றுக் கணக்கானோர் மத்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தி திணிப்பை எதிர்த்து உயிர் தியாகம் செய்தனர்.
போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த மாணவர் தலைவர்கள் எல். கணேசன், பெ.சீனிவாசன் ஆகியோரிடம் அறிஞர் அண்ணா பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை அடக்கினார். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பியது. மூடிக் கிடந்த பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் 1965 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர் இராதாகிருஷ்ணன், இந்தி பேசாத மக்கள் மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலம் நீடிக்கும் என்று நேருவின் உறுதிமொழியை பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி உறுதி செய்திருப்பதால் அதை நாங்கள் நிறைவேற்றுவோம்” என்று உறுதிபட கூறினார்.
தொடர்ந்து 1967 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றியை பெற்று ஆட்சியில் அமர்ந்தது. அறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனதும் 1968 ஜூலை மாதம் 18 ஆம் தேதி தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைக்கு எதிராக தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையை சட்டம் இயற்றி நடைமுறைக்கு கொண்டு வந்தார். அதே நாளில் சென்னை மாகாணமாக இருந்து வந்த தாய் திருநாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
கல்வியறிவு குறைவாக இருந்த ஒரு நாட்டில் மும்மொழி கொள்கை என்ற அடிப்படையில் இந்தியை கட்டாயப்படுத்தி இருந்தால் பெரும்பான்மையான மாணவர்கள் பள்ளிக்கு செல்வதை தவிர்த்து இருப்பார்கள். அப்படியே பள்ளிக்கு போனாலும் பெயில் என்று மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இடை நிறுத்தல் அதிகரித்து எதிர்காலம் பாழாகியிருக்கும்.
அதுபோன்ற மோசமான நிலைமையை தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்த தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, இந்தி மொழியை கடுமையாக எதிர்த்ததால் கல்வி என்பது எல்லோருக்கும் பொதுவானதாக மாற்ற முடிந்தது.
தாய் மொழி தமிழ், உலகை தொடர்புகொண்டு உரையாடுவதற்கு ஆங்கிலம் என்றும் விஞ்ஞான ஆய்வுக்கு கணிதம், அறிவியல், வரலாறு என்றும் சிந்திக்கும் ஆற்றலை விரிவுப்படுத்த முடிந்தது. அதனால் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள் என்று பெருகி உலக அளவில் ஆளுமை செலுத்த முடிந்தது. மூன்று மொழிகளை படித்த மாநிலங்களில் எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் பின்னோக்கி இருப்பதை நம்மால் காணமுடிகிறது.
ஒரு மொழியை அழித்தால் அந்த இனத்தை சுலபமாக அழித்துவிட முடியும் என்பது நிருபிக்கப்பட்ட வரலாறு. நமது தமிழ் மொழியையும், தமிழ்நாட்டையும் கவசமாக இருந்து பாதுகாத்தது, பாதுகாத்து வருவது திராவிட இயக்கங்களும், அதன் தலைவர்கள் மட்டுமே என்பதை தற்போதைய தலைமுறை புரிந்துக் கொள்ள வேண்டும்.
பூச்சாண்டி காட்டுகிறதா காங்கிரஸ்? திருப்பி கொடுக்க தயாராகும் திமுக! பாலச்சந்திரன் ஐஏஎஸ் நேர்காணல்!


