2026 இல் அதிமுக தலைமையில் ஆட்சி அமைப்பது என்பது வெறும் கனவுதான் என்று அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் புலம்பத் தொடங்கிவிட்டனர்.
1972 இல் அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து ஜெயலலிதா மறைந்த 2017 வரை செல்வாக்கு மிக்க கட்சியாக இருந்து வந்தது. கிராமம் தோறும் கிளைகளும் ஆற்றல்மிக்க தொண்டர்கள் பலமும் கொண்ட கட்சியாக கம்பீரமாக இருந்தது.

2017 இல் ஜெயலலிதா மறைந்தப் பின்னர் அந்த கட்சி சந்தித்து வந்த ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குகளின் சதவீதம் குறையத் தொடங்கியது. குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கு வந்தப் பின்னர் அவர் தலைமையில் சந்தித்த உள்ளாட்சி தேர்தலிலும், 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் தோல்வி அடைந்து சரிவு கணக்கு தொடங்கியது.
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக என்று பெரிய அளவில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு ஆட்சியை பறிகொடுத்தது. 2024 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க எந்த கட்சியும் ஆர்வம் காட்டவில்லை. தேமுதிகவுடன் மட்டும் கூட்டணி அமைத்து படுதோல்வி அடைந்தது. அந்த தேர்தலில் அதிமுக வாங்கிய ஓட்டு வெறும் 21 சதவீதம் மட்டுமே. அதனால் பெரும்பாலான மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் மனதளவில் சோர்வடைந்து விட்டனர்.
இதுவரை அடைந்த தோல்வியை விடுங்கள், 2026 இல் பலமான கூட்டணி அமைத்து எப்படியும் வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்து விடுவோம் என்று எடப்பாடி பழனிச்சாமி தொண்டர்களுக்கு நம்பிக்கை ஊட்டி வந்தார். முதற்கட்டமாக பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். அந்த கூட்டணி கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் பலமான கூட்டணி அமைப்போம், மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என்று நம்பிக்கையுடன் பேசி வந்தார்.

இதனிடையே நடிகர் விஜய், 2024 பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கினார். அவர் கட்சி தொடங்கியதும் தவெக தலைமையில் தான் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று முதல் மாநாட்டில் அறிவித்து சில கட்சிகளுக்கு வலை விரிக்கவும் செய்தார். குறிப்பாக திமுக கூட்டணியை உடைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெளியே கொண்டுவர ஆதவ் அர்ஜூன், ஆனந்த விகடன் குழுமத்தின் மூலம் முயற்சி மேற்கொண்டார். ஆனால் தொல். திருமாவளவன் சாதுரியமாக அதை நிராகரித்தார். அதனால் ஆதவ் அர்ஜூன் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகி நடிகர் விஜய் தலைமையில் தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
தவெக தலைவர் விஜய் தனது இரண்டாவது அரசியல் மாநில மாநாட்டை முடித்துக்கொண்டு மக்களை நேரில் சந்திக்க சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தார். முதல் பிரச்சாரத்தை கடந்த செப்டம்பர் 13 அன்று திருச்சியில் தொடங்கினார். தொடர்ந்து செப்டம்பர் 27 இல் கரூரில் நடந்த பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. தவெகவின் தலைவரும் நடிகருமான விஜய் தப்பித்தால் போதும் என்று மிரண்டு கரூரில் இருந்து சென்னைக்கு ஓடி விட்டார். நிர்வாகிகள் எல்லோரும் தலைமறைவாகி விட்டனர். தவெக என்கிற கட்சியும் நிர்வாகிகளும் மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கிக் கொண்டனர்.
அப்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தவெகவிற்கு ஆதரவு கரத்தை நீட்டினார். பாஜக தலைவர்களும் தவெகவிற்கு ஆதரவாகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் செயல்பட்டார்கள். தவெகவை காப்பாற்ற அதிமுக – பாஜக தலைவர்கள் பெரிய அளவில் உதவிகள் செய்தனர். அந்த சூழ்நிலையில் அதிமுக – பாஜக கூட்டணியில் தவெக இடம்பெறும் என்றும் அவர்களுக்கு வேறு வழியில்லை என்றும் அதிமுக நிர்வாகிகள் பேசத் தொடங்கினார்கள். குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி கலந்துக்கொண்ட அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் தவெக கொடியுடன் தொண்டர்கள் கலந்துக் கொண்டனர். அதை வைத்து அதிமுக – தவெக கூட்டணி உறுதி என்று தொண்டர்கள் வரை நம்பிக்கையுடன் இருந்தார்கள். ஆனால் அந்த நம்பிக்கை காணல் நீராய் மாறிப்போனது.

தவெக தனித்து போட்டி உறுதி
கரூர் சம்பவத்திற்கு பின்னர் 40 நாட்கள் கழித்து நவம்பர் 5 ஆம் தேதி தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில் தவெக தலைமையில் தான் கூட்டணி என்றும், திமுகவிற்கும் தவெகவிற்கும் இடையே தான் போட்டி என்றும், விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று உறுதியுடன் அறிவித்து தனது அரசியல் வியூகத்தை கூர்மைப்படுத்தினார். அதை டி.டி.வி. தினகரன் வழிமொழிந்து பேசியுள்ளார். அதனால் தவெகவுடன் டி.டி.வி.தினகரன், ஓபிஎஸ் , செங்கோட்டையன் அணி இணைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
இப்போது 2026 தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி, தவெக தலைமையில் ஒரு கூட்டணி, நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி என்று நான்கு முனைப் போட்டி என்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் நிரூபிக்கப்பட்ட 45 சதவீதம் வாக்குகள் திமுக கூட்டணிக்கு இருக்கிறது. அந்த வாக்கு வங்கி கடந்த தேர்தலில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் தனித்து போட்டியிடுவதால் அதில் 5 சதவீதம் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மீதி இருக்கின்ற 60 சதவீதம் வாக்குகளை மூன்று அணிகளும் பிரித்துக் கொள்ள வேண்டும். இதுதான் தேர்தல் களத்தின் எதார்த்தம். அதனால் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சியை பிடிப்பது சாத்தியமில்லை என்பதை அதிமுக நிர்வாகிகள் உணர்ந்து கொண்டனர். அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு இல்லாத சூழலில் தேர்தலில் போட்டியிட மூத்த நிர்வாகிகள் ஆர்வம் காட்டவில்லை என்று கூறிவருகின்றனர்.



