2026 சட்டமன்ற தேர்தலில் நம்மை எதிர்த்து டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, லோக்கலில் இருந்து வந்தாலும்சரி, அவர்களுக்கு தமிழ் மண்ணில் திமுகவுக்கு வெற்றி மட்டுமே கிடைக்கும் என்று புரியவைப்போம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டம் வருகை தந்தார். அவருக்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆயிரக்கணக்கான திமுகவினர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, திருவெண்ணெய்நல்லூரில் புதிததாக நிறுவப்பட்டுள்ள கலைஞரின் 3 அடி உயர வெண்கல சிலையை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 2026 சட்டமன்ற தேர்தலில் நம்மை எதிர்த்து யார் வந்தாலும், எப்பேர்பட்ட கூட்டணி அமைத்தாலும், எந்த திசையில் இருந்து வந்தாலும், டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, லோக்கலில் இருந்து வந்தாலும்சரி, அவர்களுக்கு புரியவைப்போம் தமிழ் மண்ணில் திமுகவுக்கு வெற்றி மட்டுமே கிடைக்கும் என்று கூறினார்.
மேலும், இன்று முதல் அரசியல் பிரசாரத்தை மேற்கொள்வோம் என அறிவுறுத்திய துணை முதலமைச்சர், திராவிட மாடல் அரசின் 3 ஆண்டுகால திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஒவ்வொரு வீட்டிலும் அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள் உள்ளனர் என்றும், எனவே கட்சியினர் பிரசாரத்தை தொடங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.