நடிகர் அஜித்குமாரின் 53வது பிறந்தநாள் இன்று.
தல என்று சொல்லாமல் ரசிகர்களுக்கு ஒருவிதமான உத்வேகம் கிடைக்கும். அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்தது வைத்திருக்கிறார் நடிகர் அஜித். இவர் ஆரம்பத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் தனியாகவே திரைத்துறையில் நுழைந்து தனது கடின உழைப்பினால் இந்த அளவிற்கு முன்னேறி தனக்கான முத்திரையை பதித்துள்ளார். நடிகர் அஜித் 1990 இல் என் வீடு என் கணவர் என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர். அதைத் தொடர்ந்து ஆசை, காதல் கோட்டை, காதல் மன்னன், அமர்க்களம், அவள் வருவாளா என அடுத்தடுத்த காதல் படங்களில் ரொமான்டிக் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மனதில் காதல் மன்னனாகவே மாறினார்.
அதேசமயம் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான வாலி திரைப்படத்தின் ஹீரோவாகவும், வில்லனாகவும் களமிறங்கினார். அடுத்ததாக சிட்டிசன், வில்லன் என தொட்டது அனைத்திலும் வெற்றி கண்டு தமிழ் சினிமாவில் கோலாச்சி செய்கிறார். மேலும் நடிகர் அஜித் தனது ஒவ்வொரு படங்களுக்காகவும் தனது உடல் எடையை அதிகரிப்பது, பின்னர் உடல் எடையை குறைப்பது என பல முயற்சிகளை மேற்கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விடுவார். அந்த வகையில் இவர் நடித்திருந்த வரலாறு திரைப்படத்தில் மூன்று வேடங்களில் நடித்து அசத்தினார். குறிப்பாக அந்த படத்தில் நடன கலைஞராக நடித்திருக்கும் கதாபாத்திரம் அனைவரிடமும் பேசப்பட்டது.
தொடர்ந்து ஆரம்பம், வீரம், வேதாளம் போன்ற படங்களில் ஆக்சன் காட்சிகளில் மிரட்டி வருகிறார். இப்படிதான் நடிகர் அஜித் ஆசைநாயகனாக இருந்து காதல் மன்னனாக மாறி அல்டிமேட் ஸ்டாராக உருவெடுத்தார். இருப்பினும் அஜித் நடித்து வெளியான சில படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை என்றாலும் ரசிகர்கள் அஜித் மீது கொண்ட அன்பு துளி அளவு கூட குறையவில்லை.
இது ஒரு பக்கம் இருந்தாலும் அஜித், சோசியல் மீடியாவில் இருப்பதில்லை, ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வருவதில்லை, ரசிகர்களை சந்திப்பதில்லை, பேட்டிகள் தருவதில்லை என அஜித் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தாலும் ரசிகர்கள் ஒருபோதும் அஜித்தை கொண்டாட மறுப்பதில்லை. அந்த வகையில் தல என்றாலே ஆர்ப்பரிக்கும் ஒரு கூட்டமே இருக்கிறது. கடைசியாக அஜித் துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய 53வது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடி வரும் நடிகர் அஜித்துக்கு நாமும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்வோம்.