கலைஞர் புகைப்பட கண்காட்சி – 7 ஆம் தேதி வரை நீட்டிப்பு
முன்னாள் முதலமைச்சரும் முத்தமிழ் அறிஞருமான கலைஞரின் அரிய புகைப்படங்களை கொண்டு சென்னையில் நடத்தப்பட்ட கண்காட்சி, வரும் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 6 ஆயிரம் புகைப்படங்கள் கொண்ட இந்த கண்காட்சி, வரலாற்றுப் பதிவுகளுக்கு வரவேற்பு அளிக்கும் விதத்தில், பார்வையாளர்களை பரவசப்படுத்தி உள்ளது.


புகைப்படக் கலைஞர் கோவை சுப்புவின் ஏற்பாட்டில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இந்த புகைப்பட கண்காட்சி கடந்த 30 ஆம் தேதி துவங்கப்பட்டது. திமுக பொருளாளர் டி.ஆர். பாலு துவக்கி வைத்த இந்த கண்காட்சியில், கலைஞரின் சிறு வயது முதல் முதுமை அடைந்த கடைசி காலம் வரையிலான பல்வேறு புகைப்படங்கள் வரலாற்று சுவடுகளை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்துள்ளன.
தாய் அஞ்சுகம் அம்மையார் தந்தை முத்துவேலுடன் கலைஞர் இருக்கும் காலம் தொட்டு, 14 வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அவர் கலந்து கொண்டு பொது வாழ்க்கையில் அடி எடுத்து வைத்த புகைப்படங்கள் உள்ளிட்டவை, இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
தந்தை பெரியாருடனும் பேரறிஞர் அண்ணாவுடனும் அவர் இருந்த புகைப்படங்களும் பிரதமராக இருந்த இந்திரா காந்தி, வி.பி. சிங், ராஜீவ் காந்தி, வாஜ்பாய், மன்மோகன் சிங், மோடி உள்ளிட்டோருடன் இருந்த புகைப்படங்களும் தமது நண்பர் எம்ஜிஆர் உடன் கலைஞர் இருந்த புகைப்படங்களும் நீங்காத நினைவுகளுக்கு நிழலூட்டின.
மேலும் கலைஞரின் மனசாட்சியாக புகழப்பட்ட மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் உடன் இருந்த புகைப்படமும் அவரது மறைவுக்கு பின் அவருக்கான சிலை அமைத்த நிகழ்வு மற்றும் அஞ்சல் தலை வெளியிட்ட புகைப்படங்களும் இந்த கண்காட்சியில் காண்போரின் கவனத்தை ஈர்த்தன.

அப்துல் கலாம் உள்ளிட்ட குடியரசுத் தலைவர்களுடன் கலைஞர் பயணித்த நினைவலைகளும் இதில் நிழலாடின. சர்வதேச புகழ்பெற்ற ஜாக்கி சான் மற்றும் இந்திய அளவிலான பிரபலங்களுடன் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் கலைஞருடன் கலந்திருந்த கட்டங்களை அரங்கத்தில் இருந்த நிழற்படங்கள், அழகியலின் ஆதாரமாய் மின்னின.
மேலும் கலைஞர் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட அரசின் பல்வேறு திட்டங்களை பட்டியலிடும் படங்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமது குடும்பத்தினருடன் கலைஞர் கடந்து வந்த பாதைகயை விளக்கிய படங்களும் கண்காட்சியில் படையென திரண்டு, களைகட்டி காணப்பட்டன.
அவற்றை திமுக விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் உள்ளிட்டோர், பார்த்து பரவசப்பட்டனர்.
6000 அரிய புகைப்படங்களைக் கொண்ட இந்த கண்காட்சி, வரலாற்று சாதனைகளின் வடிவங்களாக மட்டுமல்லாமல், வருங்கால தலைமுறையினருக்கும் கலைஞரின் அரசியல், இலக்கியம் மற்றும் கலை திறனை பறைசாற்றக் கூடிய வகையில் இருக்கும் என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடம் இருக்காது என்றார் கலைஞர் புகைப்பட கண்காட்சி ஏற்பாட்டாளர், கோவை சுப்பு.


