சென்னை அருகே அரியவகை குரங்கினை விடுவிக்க லஞ்சம் வாங்கிய புகாரில் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4பேர் பணியிடை நீக்கம்.


சென்னை அடுத்த செங்குன்றம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் அசோக், காவலர்கள் வல்லரசு, கிருஷ்ணமூர்த்தி, மகேஷ் ஆகியோர் தனிப்பிரிவில் பணியாற்றி வந்தனர். கடந்த ஜனவரி 30 ஆம் தேதி செங்குன்றம் அருகே பம்மதுகுளம் பகுதியில் வழக்கு விசாரணைக்காக உதவி ஆய்வாளர் அசோக் தலைமையிலான 4பேர் கொண்ட தனிப்படையினர் செல்லும் போது கர்நாடக பதிவெண் கொண்ட ஆடி சொகுசு கார் ஒன்று சாலையோரம் நின்றுள்ளது.
சுமார் 2மணி நேரம் விசாரணைக்கு பிறகு மீண்டும் திரும்பி வந்த போதும் கார் அதே இடத்தில் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த தனிப்படையினர் சொகுசு காரில் இருந்தவர்களிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது காரில் அரியவகை உராங்குட்டான் குரங்குகள் இருந்துள்ளன.
![]()
தீவிர விசாரணையில் வெளிநாட்டில் இருந்து குரங்குகளை இறக்குமதி செய்து கர்நாடகாவிற்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளனர். தொடர்ந்து குரங்கு குறித்து விசாரணை நடத்திய தனிப்படை போலீசார் குரங்குகளை பறிமுதல் செய்யாமல் இருக்க 5 லட்சம் பணம் தருமாறு கேட்டுள்ளனர். சொகுசு காரில் குரங்குகளை கொண்டு வந்த கும்பல் உடனே 5லட்சம் பணத்தை கொடுத்த நிலையில் மேற்கொண்டு உயரதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் எனவும் மேலும் 20லட்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். அடுத்தகட்டமாக 20லட்சமும் கொடுக்கப்பட்டவுடன் சொகுசு காரில் உராங்குட்டான் குரங்குகளுடன் அந்த கும்பலை தனிப்படை போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
செங்குன்றம் காவல் நிலையத்தில் லஞ்சப் புகார் தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் சிறப்பு குழுவை அமைத்து உராங்குட்டான் குரங்கு கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டார்.![]()
இந்த விசாரணையில் செங்குன்றம் காவல் நிலைய தனிப்படையை சேர்ந்த உதவி ஆய்வாளர் அசோக், காவலர்கள் வல்லரசு, மகேஷ் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பணம் பெற்றுக்கொண்டு குரங்கு கடத்தல் கும்பலுக்கு துணை போனது தெரிய வந்தது. இதனையடுத்து ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் காவல் உதவி ஆய்வாளர் அசோக் உள்ளிட்ட 4 காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். உராங்குட்டான் குரங்கு கடத்தலுக்கு துணை போன தனிப்படை உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் காவல்துறையினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


