அதிமுக வேட்பாளர் தென்னரசுவை டெபாசிட் இழக்கச்செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பரப்புரை செய்து வருகிறார். பிற்பகலில் இடையன் காட்டு வலசு பகுதியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.


அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,
பெரியார் பிறந்த மண்ணில் அறிஞர் அண்ணா வாழ்ந்த மண்ணில் கலைஞர் குருகுலமாக கொண்ட இந்த மண்ணில் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்த தொகுதிக்கு பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வர ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காத்திருக்கின்றார். அவரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஏற்கனவே இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கின்றார். ஆனால் அவர்களால் இந்த தொகுதிக்கு எந்த நல்ல செயல்களும் செய்யவில்லை.

கொரோனா காலத்தில் வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே யாரையும் விடாமல் இருந்தவர் தான் அதிமுக வேட்பாளர். அவர் டெபாசிட் இழக்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
மகன் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தேர்தலில் அவர் போட்டியிடுகின்றார். பெரியார் குடும்பத்தை சார்ந்தவர் ஈ.வி.கே.சம்பத் மகனுக்கு கலைஞர் மகன் வாக்கு கேட்டு வந்திருக்கின்றேன். அவரை வெற்றி பெறச் செய்யுங்கள்.
தேர்தல் வாக்குறுதியில் 85% வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கின்றோம். எஞ்சிய 15 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவோம் என்று அவர் தெரிவித்தார்.

பள்ளி முடித்து கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. நான் முதல்வன், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி இதுபோன்று அறிவிக்காத பல திட்டங்களையும் நிறைவேற்றி வருகின்றோம். வாக்குறுதியில் அளித்த திட்டங்களாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் மிக அற்புதமான திட்டம் போன்ற பல திட்டங்களையும் நிறைவேற்றி வருகின்றோம். ஆனால் எதிர்க்கட்சியினர் எதையும் செய்யவில்லை என பேசி வருகின்றனர்.
கடந்த ஆட்சியில், கஜானா காலியாக மட்டுமல்லாமல் கடனும் வைத்து சென்றார்கள். அதனால் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற இயலவில்லை என்றாலும் இந்த திட்டத்தை நிறைவேற்ற உறுதியாக இருக்கின்றோம். அடுத்த மாதம் நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மார்ச் இரண்டாவது வாரத்தில் நிதிநிலை அறிக்கையில் உரிமைத்தொகை குடும்ப தலைவிகளுக்கு வழங்குவது எந்த தேதியில் இருந்து வழங்கப்படும் என்பதை அறிவிக்க இருக்கின்றோம். சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் என்று அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருவது தான் திமுக ஆட்சி.

இந்த ஆட்சிக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். இதனை இடைத்தேர்தலாக மட்டும் பார்க்காமல் எடை போடக்கூடிய தேர்தலாக பார்க்க வேண்டும். ஆட்சியில் செய்திருக்கும் சாதனைகளுக்கு அங்கீகாரம் தருவதற்கு கை சின்னத்திற்கு ஆதரவு தர வேண்டும். வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மிகப்பெரும் வெற்றியை உருவாக்கி தர வேண்டும்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது இரண்டு ஆண் குழந்தைகளுக்கு பெயர் சூட்டினார். ஒரு குழந்தைக்கு கதிரவன் என்றும் மற்றொரு குழந்தைக்கு கருணாநிதி என்றும் அவர் பெயர் சூட்டினார். இடையன் காட்டு வலசு பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அடுத்ததாக ஈரோடு பெரியார் நகரில் தேர்தல் பரப்புரையை அவர் நிறைவு செய்கிறார்.


