மார்ச் 19ம் தேதி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும், அதன் மூலம் பெறப்படும் நிதி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் பெப்சி தலைவர் அர்.கே.செல்வமணி தெரிவித்தார்.
சென்னை வடபழனியில் உள்ள தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன அலுவலகத்தில் பெப்சி தலைவரும், இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “தமிழ் திரைப்பட துறையில் எங்களது கடைநிலை ஊழியர்கள் ரூ. 1000 சம்பளத்தை தொடுவதற்கு ஏறக்குறைய 100 ஆண்டுகள் ஆகிறது. இது தான் தற்போதைய நிலையாக இருக்கிறது. திரைப்பட துறையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. சில பேர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழக்கின்றனர். இது ஒரு நாள் செய்தியாக வந்து மறுநாள் வருத்தம் தெரிவிப்பதுடன் மறந்து விடுகிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய எந்த வழிவகையும் இல்லாமல் இருக்கிறது.


சமீபத்தில் கூட இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகும் படத்தில் ஸ்டன்ட்மேன் ஒருவர் விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதற்கு முன் லைட் மேன் இரண்டு பேர் உயிரிழந்தனர். பெரிய நடிகர்களின் படங்களில் தொழிலாளிகள் இறந்து விட்டால் அதிர்ஷ்ட வசமாக அவர்கள் குடும்பத்துக்கு உதவி கிடைக்கிறது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் சார் படங்களில், அதாவது இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து நடந்த போது 1 கோடி ரூபாய் நிதியுதவி கிடைத்தது. ஆனால் படமெடுக்க சிரமப்படும்/ சிறிய தயாரிப்பாளர்கள் படங்களில் விபத்து நடந்தால் / மரணம் ஏற்பட்டால் உதவ முடியாத நிலையில் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். எப்படி ஒரு தொழிலாளர்கள் இறந்தால் மத்திய மாநில அரசுகள் உதவி செய்கிறதோ அதே போல் திரைப்பட துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களில் விபத்து ஏற்பட்டாலோ அல்லது உயிரிழந்தாலோ அவர்களுக்கான மருத்துவ செலவுகள் , மருத்துவ வசதி அல்லது அந்த குடும்பத்துக்கான நிதியுதவியை மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கையாக வைக்கிறேன்.
சிலருக்கு சில விஷயங்கள் முன்னுதாரணமாக அமைகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏ. ஆர் ரகுமான் ஸ்டுடியோவில் விபத்து ஏற்பட்டு லைட் மேன் இறந்து விட்டார். அந்த அதிர்ச்சியில் அவர் ஸ்டுடியோவை மூடி விட்டதாகவும், அந்த வலி அவரை நேரடியாக பாதித்ததாகவும் கூறினார். அதனால் அவரே எங்களை தொடர்பு கொண்டு, லைட் மேன் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பணிபுரியும் இடங்களில் விபத்து ஏற்பட்டு மரணமடைந்தால் அவர்களுக்கு உதவ கார்ப்பரேட் ஃபண்ட் ரெடி பண்ணுகிறேன் என்று சொன்னார். அதற்காக மார்ச் 19 ஆம் தேதி ஒரு பிரத்யேக இசை நிகழ்ச்சி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்க இருக்கிறது. அந்த நிகழ்ச்சி மூலம் பெறப்படும் நிதியை திரைத்துறையில் உள்ள முக்கியமானவர்களை பொறுப்பாளராக வைத்து லைட் மேன் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் எந்த படத்தின் ஷூட்டிங்கில் விபத்து ஏற்பட்டால் அல்லது உயிரிழந்தால் நிதி ஆதாரத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் கூறினார்.

அந்த குடும்பத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் , செய்ய வேண்டியதை செய்துவிட்டார். இருந்தாலும் இது போன்ற விபத்தில் பாதிக்கப்படும் எல்லாருக்கும் உதவ வேண்டும் என்று முன்வந்தது ரொம்ப நல்ல விஷயம். திரைத்துறையை சேர்ந்தவர்கள் ஏ.ஆர் ரகுமானை முன்னுதாரணமாக கொண்டு, கடைநிலை ஊழியர்கள்/ தினக்கூலி வாங்கும் 24 சங்கங்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய தொழிலாளர்கள் நலனுக்காக நடிகர்கள், கலைஞர்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் 1 சதவீதத்தையாவது நன்கொடையாக வழங்க வேண்டும். திரையரங்குகளில் வரும் டிக்கெட்டில் 1 டிக்கெட்டுக்கு 1 ரூபாய் வீதம் பிடித்தம் செய்து அதை நிதி ஆதாரமாக கொண்டு திரைப்பட தொழிலாளர்களுக்கு 60 வயதை கடந்த பிறகு மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பதை மாநில அரசுக்கு கோரிக்கையாக வைக்கிறோம். அரசாங்கம் நிறைய உதவிகள் செய்தாலும் பல நேரங்களில் அது முறையாக தொழிலாளிகளை வந்து சேர்வதில்லை.
தொழிலாளர்களுக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும். எங்களுக்கு இஎஸ்ஐ கிடையாது. நாங்கள் மாதம் 25 நாட்கள் பணிபுரிந்தாலும் இஎஸ்ஐ இல்லை. எங்களுக்கு மருத்துவமனை வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எங்கள் திரைப்பட தொழிலாளர்களுக்கு நேரடியாக உதவி செய்வது மாதிரியான திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுக்கிறேன். எங்கள் தொழிலாளிகளுக்கு நேரடியாக எதாவது உதவி செய்ய வேண்டும். எங்கள் சங்கத்தை சேர்ந்த கலைஞர்கள்/ தொழிலாளர்கள் சேர்ந்து புதிதாக உருவாக்கப்பட்ட ஸ்டுடியோ ஒன்றை துவங்க இருக்கிறோம். அதை முதல்வர் வந்து துவக்கி வைக்க வேண்டும். அதில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடக்க உள்ளது. மேலும் எல்லா படப்பிடிப்பு தளத்திலும் குறைந்தபட்ச பாதுகாப்பு கருவிகள் இருக்க வேண்டும். ஏப்ரல் 1 முதல் பாதுகாப்பு கருவிகள் இருக்கும் படப்பிடிப்பு தளத்தில் தான் எங்களது தொழிலாளிகள் பணியாற்றுவார்கள்.” என்று ஆர்.கே.செல்வமணி கூறினார்.


