சேலத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில், நர்சிங் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுநரை AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சேலம், கோரிமேடு அருகே உயிரியல் பூங்காவில் இருந்து கடந்த 16-ம் தேதி இரவு பழைய பேருந்து நிலையம் நோக்கி சென்ற அரசு நகர பேருந்தில் நர்சிங் கல்லூரி மாணவி ஒருவர் பயணம் செய்துள்ளார். அப்போது அதே பேருந்தில் பயணம் செய்த ஒருவர் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அந்த மாணவி , பணியில் இருந்த நடத்துநர் திருமுருகனிடம் தெரிவித்துள்ளார். ஆனால் நடத்துநர், அதனை அலட்சியப்படுத்தியாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த மாணவி, செல்போன் மூலம் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததால், பெற்றோர் தங்கள் உறவினர்களுடன் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை பேருந்தில் தேடி உள்ளனர்.
ஆனால் அவர் பேருந்தில் இல்லாததால், ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பேருந்தின் நடத்துநர் திருமுருகன் மற்றும் ஓட்டுநர் தனபால் ஆகியோரை சரமாரியாக தாக்கினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் சேலம் டவுன் காவல் நிலைய போலீசார் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து மாணவியின் தந்தை ஆறுமுகம் , உறவினர் பாலமுருகன் ஆகிய இருவரை கைது செய்தனர்.

இதற்கிடையே பேருந்தில் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பேருந்தில் இருந்து அவர் இறங்கிய பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, கண்காணிப்பு கேமராவில் அந்த நபரின் உருவம் தெளிவாக இல்லாததால் , அவரை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் அந்த நபரின் உருவத்தை அடையாளம் கண்டறிந்ததில் , அவர் கிச்சிப்பாளையம் தேசிய புனரமைப்பு காலனியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் முரளி என்பதும் , அவர் நேற்று முன்தினம் சேலத்தில் இருந்து சென்னைக்கு லாரியில் சரக்கு ஏற்றிக்கொண்டு சென்றுள்ளதாகவும் தகவல் கிடைத்ததையடுத்து சென்னைக்கு விரைந்த போலீசார், முரளியை கைது செய்து சேலம் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தெளிவில்லாத அடையாளத்தை வைத்து AI தொழில் நுட்பம் மூலம் அவருடைய தெளிவான அடையாளத்தை கண்டறிந்து, போலீசார் குற்றவாளியை பிடித்தது கவனத்தை ஈர்த்துள்ளது.