டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய் மாலியா பக்ஷி அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.


வழக்கறிஞர்களின் வாதங்கள்
விசாரணையின்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “கடந்த 2021 முதல் 2025 ஆம் ஆண்டு காலகட்டத்திலேயே ஏற்கனவே முதற்கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டுவிட்டன. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஏற்கனவே முடிந்த விவகாரத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர்” என வாதிட்டார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதிடுகையில், “குறிப்பிட்ட அந்த 2021 – 2025 காலகட்டத்தில் செந்தில் பாலாஜிதான் அமைச்சராகவும் அவர்களின் ஆட்சிவும்தான் நடைபெற்றது; எனவே அந்த சமயத்தில் இவ்வழக்கு பதிவு செய்யப்படுவதை அவர் தடுத்து வைத்திருந்தார். இந்த விவகாரத்தில் பலநூறு கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதற்கான முகாந்திரம் உள்ளதால்தான் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சம்பந்தப்பட்ட நபர் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இழுத்தடிப்பார்” என்று தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “இந்த வழக்கில் புலன் விசாரணையின் போது அவர் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். மேலும் விசாரணைக்குத் தேவைப்பட்டால் தாங்கள் எங்களை அணுகலாம்” என்று தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்குவதாகவும், அவரை கைது செய்யக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த மனு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜி தனது கடவுச்சீட்டை (Passport) ஒப்படைக்க வேண்டும் என்றும், சாட்சிகள் மீது எந்தவிதமான தாக்கத்தையோ அல்லது ஆதிக்கத்தையோ செலுத்தக் கூடாது என்றும் கடுமையான நிபந்தனைகளை விதித்தனர்.
