ஆளுநர் சட்டப்பேரவையில் நடந்து கொண்ட அநாகரிகமான செயலை கண்டித்து தனிநபர் தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வர உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.


நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையை முழுமையாக வாசிக்காத ஆளுநர், திராவிட மாடல் என்ற வார்த்தை, பெரியார், அண்ணா ,கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களை குறிப்பிடாமல் அந்த பத்தியை முற்றிலுமாக தவித்தார்.
இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்ட நிலையில் , ஆளுநர் அச்சிடப்படாத வாசகங்களை வாசித்தது எதுவும் அவை குறிப்பில் இடம்பெறாது என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார். இதன் காரணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டத்தொடர் முடிவதற்குள் வெளியேறினார்.
இந்நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை, “ஆளுநர் அநாகரிகமாக சட்டப்பேரவையில் நடந்து கொண்டார். அதை எதிர்த்து நாளை சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வர உள்ளோம். அதற்கான மனுவை சபாநாயகரிடம் இன்று கொடுத்துள்ளோம்.
இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு பேரவையில் மோசமான கலாச்சாரத்துடன் ஆளுநர் நடந்துக்கொண்டார். ஆளுநரை தமிழக மக்கள் புறம் தள்ள வேண்டும். தமிழக ஆளுநர் செயல் கரும்புள்ளியை ஏற்படுத்தியுள்ளதோடு, ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை ஆளுநர் தற்போது வெளிப்படுத்தியிருப்பது தெரிகிறது. தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த ஆளுநரை வைத்து முயற்சி செய்கிறார்கள்” எனக் குற்றஞ்சாட்டினார்.


