புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நடந்த தீண்டாமை வன்கொடுமை சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கமளித்ததார்.


அப்போது, தகவல் கிடைத்தவுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவிட்டேன். மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. கிராமத்தில் ஆய்வு செய்தனர். மருத்துவக் குழுவினர் தொடர்ந்து அங்கு கண்காணிப்பு பணியில் உள்ளனர்.கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி சுத்தம் செய்து அறிக்கை பெறப்பட்டுள்ளது.கடந்த 5 ஆம் தேதி முதல் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சுகாதாரத்துறையினர் கிராமத்தில் முகாமிட்டு, நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தண்ணீர் தொட்டியில் மலம் கலந்தவர்களை கைது செய்ய சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. நாம் எவ்வளவுதான் பொருளாதாரம், அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னேறிச் சென்றாலும் இதுபோன்ற நிகழ்வுகள் சமூக அமைதியிலும், ஒற்றுமையிலும் தடைக்கற்களாக அமைகின்றன
எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் சமூகநீதி. சாதிய பாகுபாடுகள் அங்கொன்றும், இங்கொன்றும் இருந்து வருவதை இந்த சம்பவம் வெளிகாட்டுகிறது. வேங்கைவயல் கிராமத்தில் நடந்தது கண்டிக்கதக்கது. மதம் உன்னை மிருகமாக்கும் சாதி உன்னை சாக்கடையாக்கும் என்பதை மனிதில் கொண்டு வாழ வேண்டும். இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.


