சென்னையில் மக்கள் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை புறநகரில் இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களும் 12 பெட்டிகளாக மாற்றப்படும் என, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி உள்ளிட்ட தடத்தில் 450க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஆனால், திருவள்ளூர், மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய தடங்களில் 60 சதவீத மின்சார ரயில்களில், மட்டுமே 12 பெட்டிகள் இருக்கின்றன.
மேலும், 40 சதவீத ரயில்கள், ஒன்பது பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன. இதனால், காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் கூட்ட நெரிசலில் சிக்கி பயணிகள் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து பயணிகள் கூறியது,
திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி போன்ற புறநகர் பகுதிகளில் இருந்து அன்றாடமும் சென்னைக்கு வந்து செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், அதற்கு போதிய அளவில் ரயில்கள் இயக்கப்படுவதில்லை.
ஒன்பது பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்களே பெரும்பாலும் இயக்கப்படுவதால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.
ரயில்களின் படிகளில் ஆபத்தான முறையில், தொங்கிய படி பயணம் செய்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது,
கூட்ட நெரிசல் இன்றி பயணிக்க வசதியாக, அனைத்து மின்சார ரயில்களும் 12 பெட்டிகளாக மாற்றி இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
12 பெட்டிகள் நிற்கும் வகையில், பெரும்பாலான மின்சார ரயில் நிலையங்களின் நடைமேடைகளை விரிவாக்கம் செய்துள்ளோம்.
சில ரயில் நிலையங்களில் நடக்கும் பணிகளும் விரைவில் முடிந்து விடும்.
அதுபோல, 12 பெட்டிகள் கொண்ட புது மின்சார ரயில்கள் வரவர படிப்படியாக மாற்ற உள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து மின்சார ரயில்களும் 12 பெட்டிகளாக மாற்ற திட்டமிட்டுள்ளோம்.