சட்டமன்றத்தில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் சங்பரிவார்கள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட செயல் திட்டங்களில் ஒன்றாகத் தான் உணர முடிகிறது.
ஆளுநரின் இந்த நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. அறிவாலயத்தில் முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி.


சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் தொல். திருமாவளவன் தனது கட்சி எம்எல்ஏக்களுடன் நேரில் சந்தித்து பேசினார்.
சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன்,
“முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை சந்தித்து ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களுடன், சட்டப்பேரவையில் ஆளுநருக்கு தக்க பதிலடி கொடுத்ததற்கும் வாழ்த்து தெரிவித்ததாக கூறினார்.

ஆளுநரின் ஒப்புதல் பெற்ற பிறகு தான் ஆளுநர் உரை சட்டப்பேரவையில் படிப்பதற்கு அச்சிக்கே செல்கிறது. அவ்வாறு, ஆளுநரின் ஒப்புதலோடு அச்சிடப்பட்ட அவரது உரையில் உள்ளவாறு படிக்காமல், சில பகுதிகளையும், வார்த்தைகளையும் தவிர்த்து இருக்கிறார்.
சிலவற்றை விருப்பம் போல் இணைத்து வாசித்து இருக்கிறார். இது சங்பரிவார்கள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட செயல் திட்டங்களில் ஒன்று என்று தான் உணர முடிகிறது.
ஆளுநரின் இந்த நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. இதை விரைவாக உணர்ந்து சட்டமன்றத்திலேயே முதலமைச்சர் எதிர்வினை ஆற்றியுள்ளதாக கூறினார்.
ஆளுநரை கண்டித்து 13ம் தேதி மாலை 3 மணி அளவில் சைதையிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக புறப்பட்டு முற்றுகை போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஈடுபட இருப்பதாகவும், இதை விசிக முன்னெடுத்தலும், அனைத்து ஜனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என்று குறிப்பிட்டு இருந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஆளுநர் தமிழகம் என்று அழைக்கட்டும், தமிழ்நாடு என்று அழைக்கட்டும் அது குறித்து எந்த பிரச்சினையும் இல்லை.

ஆனால் தமிழ்நாடு இலட்சிணையை புறக்கணித்தால் அது தமிழ்நாடு அரசை அவமதிக்கின்ற செயல்.
அதனை வன்மையாக கண்டிக்கின்றோம். அவரை வெளியேற்றுகின்ற போராட்டங்களை விசிக முன்னெடுக்குமென பதிலளித்தார்.


