சென்னை வியாசர்பாடியில் பரோட்டா சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை வியாசர்பாடி சர்மா நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்.
இவர் ரெட்டேரி ஆர்டிஓ அலுவலகத்தில் ஏஜென்ட் ஆக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை . இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் குடும்பத்தில் உள்ள அனைவரும் சாலையில் உள்ள சாலையோர ஹோட்டலில் இருந்து பரோட்டா வாங்கி வந்து வீட்டில் சாப்பிட்டதாகவும், பிறகு அனைவரும் தூங்கிய நிலையில் கார்த்திக் என்பவருக்கு மட்டும் சுமார் 11 மணியளவில் குமட்டல் மற்றும் மயக்கம் ஏற்பட அருகில் உள்ள நலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அங்கு கார்த்திக்கின் உடல்நிலை மோசமானதால் மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே கார்த்திக் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இவர் பரோட்டா சாப்பிட்ட பின்பு குளிர்பானம் அருந்தி இருப்பதாக தெரிகிறது. இதனை அடுத்து பிரேத பரிசோதனைக்கு பின்பு எதனால் உயிரிழந்தார் என்பது குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.


