யாழ் அமுதா
இவ்வுலகில் எல்லா உயிரினங்களும் காலத்திற்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொள்ளும் போதுதான் வாழும் தகுதியைப் பெறுகின்றன. இந்த வரையறை மனித உயிரினத்தின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பான மொழிக்கும் அப்படியே பொருந்தும்.ஓரிரு மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், தந்தை பெரியாரின் பெயரைக் குறிப்பிடாமல் “தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் படத்தை ஒவ்வொருவரின் அறையிலும் வைத்திருக்கின்றனர். அவருக்கு மாலை அணிவித்து வணங்குகின்றனர். திராவிடர் இயக்கத்தின் அடையாளம் என்கின்றனர். ஆனால் அவர் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று கூறியுள்ளார்.” எனப் பேசினார்.

தந்தை பெரியார் மீதான இதே அவதூறை தமிழகத்தில் நாஜிக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானும் வன்மத்தோடு பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறார். இப்படி நா கூசாமல் வன்மத்தை விதைக்கும் இவர்கள் அந்தத் தந்தைதான் காலத்திற்கு ஏற்ப தமிழின் எழுத்துகளைக் கையாள இலகுவாக எளிமைப்படுத்தி நவீனமாக்கினார் என்பதை மிகக் கவனமாக மறந்தும் மிக வசதியாக மறைத்தும் விடுவார்கள்.
பெரியார் வாழ்ந்த சமகாலத்தில் தமிழில் புலமை பெற்றவர்களும் இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த அறிவுபெற்ற சான்றோர்களும் மொழியின் அமைப்பை, உச்சரிப்பை, எழுத்து வடிவத்தை ஆய்வு செய்யும் மொழியிலாளர்களும் எண்ணற்றோர் இருந்திருந்த போதிலும், தமிழின் எழுத்து முறைகளில் எந்தச் சான்றோரும் செய்திராத மாற்றத்தைத் துணிந்து செயல்படுத்தியவர் தந்தை பெரியார். அதைச் செய்தபோது தான் ஒரு மெத்தப் படித்தவனோ ஆராய்ச்சியாளனோ இல்லை என்பதை மிக அடக்கமாக ஒப்புக்கொண்டு கூறுகிறார்.
“நாம் 10 ஆவது வயதுக்கு மேல் எந்தப் பள்ளிக்கூடத்திலும் படிக்கவில்லை. நமக்குப் புத்தக ஆராய்ச்சி இல்லை. நமக்குள்ள அறிவு என்பதைக் கொண்டு நடுநிலை என்பதிலிருந்து ஆராய்வதன் மூலம் அறிவதும், ஆராய்சசிக்காரர்கள் என்பவர்களைச் சந்திக்கும்போது கேட்டு அறிவதும்தானே ஒழிய வேறில்லை என்பதைக் கண்ணியமாய் ஒப்புக் கொள்கிறோம்” என்று மிகநேர்மையோடு ஒப்புக்கொண்டே தமிழின் எழுத்துகளை சீரமைக்க அக்கறையோடு ஈடுபட்டவர்.
எதனால் தான் இந்த மொழிச் சீர்திருத்தத்தில் துணிந்து இறங்குகிறேன் என்று அந்தத் துணிச்சல்காரர் கூறுகிறார். “தமிழ்மொழி கடவுளால் ஆதியில் பொதிய மலையில் இருந்தோ, கைலாய மலையில் இருந்தோ கண்டுபிடிக்கப்பட்டதாகவோ இருக்கலாம். நெருப்புக்கு நூறாயிரம் பதினாயிரம் வருடங்களுக்கு முன்பு சிக்கிமுக்கிக் கற்கள்தான் இருந்தன. ஆனால் இன்று நெருப்புக்கு ஒரு பொத்தானை அமுக்குவதோ ஒருமுனையைத் திருப்புவதோ ஆகிய காரியத்தில் வந்துவிட்டது.
சாதாரணமாய் 500 வருடங்களுக்கு முந்தி இருந்த மக்களின் அறிவுக்கும் வாழ்க்கை அவசியத்திற்கும் எவ்வளவோ மாறுதலும் முற்போக்கும் இருந்து வருகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. அதுபோலவே இன்னும் ஒரு 100 அல்லது 500 ஆண்டுகள் சென்றால் இன்றைய நிலையில் இருந்து இன்னும் எவ்வளவோ தூரம் மாற்றமடைந்து முன்னேற்றங்கள் என்பவை ஏற்படலாம். ஆகையால் மாறுதலைக் கண்டு அஞ்சாமல் அறிவுடைமையுடனும் ஆண்மையுடனும் நின்று விஷயங்களை நன்றாய் ஆராய்ச்சி செய்து காலத்துக்கும் அவசியத்துக்கும் தக்க வண்ணம் தள்ளுவன தள்ளி, கூட்டுவன கூட்டித் திருத்தம் செய்ய வேண்டியது பகுத்தறிவு கொண்டவன் என்னும் மனிதனின் இன்றியமையாக் கடமையாகும் என்பதை அனேகர் உணர்ந்திருந்தாலும், அதன் பயனாய் இன்றைய தமிழ் எழுத்துகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் பல என்பதைப்பற்றி பலருக்கு அபிப்ராயமிருந்தாலும் தைரியமாய் முன் வராமலே இருக்கிறார்கள்.
இவ்வளவு பெரிய காரியத்துக்கு பாஷா ஞானம், இலக்கண ஞானம், பொதுக்கல்வி இல்லாத ஒரு சாதாரண மனிதன் முயற்சிக்கலாமா என்பது ஒரு பெரிய கேள்வியாக இருக்கலாம். ஆனால் தகுந்த புலமையும் பாஷா ஞானமும் இலக்கண அறிவும் உள்ளவர்கள் எவரும் முயற்சிக்காவிட்டால் என்ன செய்வது? தவம் செய்வதா? ஜெபம் செய்வதா? தமிழ் இன்றல்ல, நேற்றல்ல; எழுத்துகள் ஏற்பட்டது இன்று நேற்றல்ல. ஆனால் எழுத்துகள் கல்லிலும் ஓலையிலும் எழுதும் காலம் போய் காகிதத்தில் எழுதவும், அச்சு வார்த்துக் கோக்கவும் ஏற்பட்ட காலம் தொட்டு இன்று வரை அவற்றில் யாதொரு மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. யாராவது ஒருவர் துணிந்து இறங்க வேண்டியதாயிற்று.”
என்று தமிழைச் சீர்திருத்த வேண்டிய அவசியத்தை மிகுந்த அக்கறையோடு விளக்கியிருக்கிறார் நம் தந்தை பெரியார்.
தமிழின் மீது எத்தனை அன்பிருந்தால் இந்தகைய வரலாற்றுச் செயலை அவர் செய்திருக்க வேண்டும்? காட்டுமிராண்டி மொழி என்றே அவர் கூறியிருந்தாலும் அதை ஒரு தந்தைக்கிருந்த கோபமாகவோ, தன் பிள்ளைகளுக்கு மொழியை எளிமையாகப் பழகக் கொடுத்த பேரன்பாகவோ பார்க்க முடியாதவர்களிடம் வன்மத்தைத் தவிர, அவதூறுகளைத் தவிர வேறென்ன இருக்கும்!!